வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 அக்டோபர், 2010

மீள்குடியேற்றம் எனும் பெயரில் அத்துமீறிய மீள்குடியேற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாது: அரியநேத்திரன்

பிவிருத்திக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்போ நானோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் அடிப்படையான விடயங்களைச் சூறையாடுவதும், மீள்குடியேற்றம் என்ற பெயரில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களை செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2008 - 2009ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர்,

அபிவிருத்திக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்போ நானோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் அபிவிருத்தி என்ற போர்வையில் அத்துமீறிய குடியேற்றங்களை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
வடக்கு கிழக்கில் பல பாடசாலைகள் இயங்க முடியாத நிலையில் உள்ளன. போர் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு பாடசாலைகளில் கலாசார சீர்கேட்டு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. திட்டமிட்டு நுழைக்கப்படும் சீர்கேடான விடயங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் உள்ளது. இவ்வாறான பல பிரச்சினைகளைச் சீர்செய்யக்கூடிய கல்விதான் எதிர்காலத் தேவையாகும்.
வன்னியில் இருக்கும் மாணவர்களைப் பெற்றோரை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் மிகுந்த கஸ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கல்விக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை நமது பிரதேசத்து மக்கள் கொடுப்பதில்லை.
நான் அபிவிருத்தி செய்ய வேண்டாம் என்றோ, வேலைவாய்ப்பு பெற்றுத் தருவேன் என்றோ, இடமாற்றம் பெற்றுத் தருவேனென்றோ கூறி தேர்தலில் போட்டியிடவுமில்லை. வெற்றி பெறவுமில்லை. அரசாங்கத்திற்கு தென்பகுதி மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ. அதற்காகவே வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள். இதனை இப்போது ஒரு தேர்தலை நடத்தினாலும் நாங்கள் எங்களுடைய பலத்தை நிரூபித்துக்காட்டத் தயார் என்றார்.
பாடசாலை அதிபர் சி.எம்.குமாரசாமியின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பரிசளிப்;பு விழாவில் கடந்த இரண்டு வருடங்களில் பாடசாலையிலும், சாதாரணதரப் பரீட்சைகளிலும் விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் தமது திறமைகளைக் காண்பித்த மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’