-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
புதன், 27 அக்டோபர், 2010
ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவன ஊழியர்கள் 2000 பேரை வெளியேற்ற அரசாங்கம் முயற்சி:ஐ.தே.க
ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவன ஊழியர்கள் 2000 பேரை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டினார். பிழையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிர்வாக சீர்குலைவினால் ரெலிகொம் நிறுவன வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
டெலிகொம் நிறுவனம் 8 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக் கொடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கியது. ஆனால் இன்று இவ் வருமானம் 1.4 பில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது. அன்று இதன் 35 சதவிகித பங்குகளை ஜப்பானிய நிறுவனமான என்.ரி.ரி. கொள்வனவு செய்திருந்ததோடு அவர்கள் நியமித்த நிர்வாக அதிகாரிகளுக்கு அவர்களே சம்பளத்தையும் வழங்கினார்கள்.
இவ் பங்குகள் இன்று மலேஷியாவின் ஜீ.பி.எச்., மெக்ஸீஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு சேவை விஸ்தரிப்புச் செய்வதற்காக கிறேட்யங் என்ற வெளிநாட்டவர் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வருடமொன்றுக்கு இவ் அதிகாரிக்கு இலட்சம் ரூபா சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனை மெக்ஸீஸ் நிறுவனம் வழங்கவில்லை. டெலிகொம் நிறுவனமே வழங்குகிறது. இந்த நிர்வாக அதிகாரி சக உத்தியோகத்தர்களுடனோ நிர்வாக சபையினருடனோ கலந்தாலோசிக்காது தன்னிச்சையாக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்.
ஏசியன் டெலிகொம் உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளால் டெலிகொம் நிறுவனம் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது. கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளிலும் குழறுபடிகள் இடம்பெற்றுள்ளது. டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்து லாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்காக ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கு பிரிட்டிஷ் டெலிகொம் நிறுவனத்தை நியமித்துள்ளனர்.
இதற்காக 400 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. டெலிகொம் நிறுவனத்தில் மேலதிகமாகவுள்ள 2000 ஊழியர்களை வெளியேற்றினால் லாபமீட்ட முடியுமென அந் நிறுவனம் பரிந்துரை வழங்கியுள்ளது. இப் பரிந்துரையை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதனால் ஊழியர்கள் தொழில் இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். நிறுவனத்தின் வீழ்ச்சியை ஈடு செய்வதற்காக 2 ரூபா நிலையான வரி அறவிடப்படுகிறது.
நாட்டிலுள்ள தொலை தொடர்பு நிறுவனங்கள் பாவனையாளர்களுக்கு பலவிதமான சலுகைகளை வழங்குகிறது. டெலிகொம் இவ்வாறான போட்டிச் சந்தையில் எதனையும் செய்யாமல் இருக்கின்றது.எனவே தேசிய தொலைத் தொடர்பு சேவையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’