வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 அக்டோபர், 2010

வாதரவத்தை பகுதியின் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! - மாகாண மேலதிக் கல்விப் பணிப்பாளர்

ற்போதைய ஜனநாயகச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவருக்குமுள்ள பிரதான கடப்பாடு என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் புத்தூர் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ஒருகால கட்டத்தில் ஆயுதப் போராட்டத்துக்கான தேவை இருந்தது. ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்துடன் அதற்கு முடிவு காணப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அப்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட சில தவறுகளினால்தான் எமது மக்கள் இருந்ததையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகினர்.

எனவே கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் கிடைப்பவற்றைப் பெற்றுக் கொண்டு வளமாக வாழப் பழகிக் கொள்வதுடன் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நடைமுறைச் சாத்தியமான கொள்கை மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே எமது அரசியல் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் அவர்கள் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை மாறி தற்போது சுதந்திரமாகப் பேசவும் நடமாடவும் கூடிய ஜனநாயகச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள முக்கியப் பொறுப்பாகும்.

கடந்த காலங்களில் எமது மக்கள் பட்ட அவலங்களை நேரடியாக அனுபவித்தவன் என்ற வகையில் அவர்கள் கௌரவமான ஒளிமயமான வாழ்வை வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம் என்பது மட்டுமல்லாமல் குறிப்பாக அரசியல் தீர்வை எட்டுவதற்கு எல்லாத் தமிழ்க கட்சிகளினதும் இணக்கப்பாடு இன்றியமையாதது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

13வது திருத்தச் சட்டம் அரசியல் தீர்வுக்கான ஆரம்பம் என்பதுடன் நாம் தோற்றுப் போன சமூகம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பாடசாலைச் சமூகத்தால் விடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளில் ஒலிபெருக்கிச் சாதனங்கள் மற்றும் பல் ஊடகத் தெறிகருவி ஆகியவற்றை உடனடியாக மகேஸ்வரி நிதியம் ஊடாக நாளைய தினம் பெற்றுத் தருவதாகவும் ஏனைய கோரிக்கைகளுக்கு அடுத்த வருட முற்பகுதியில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாடசாலை மாணவர்களின் இசை அணி வகுப்புடன் பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கு பாடசாலை அதிபர் தவநாயகம் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் மற்றும்பதில் அதிபர் மூவரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் செல்வரத்தினம் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்துக் கௌரவித்தார்.

நூற்றாண்டு விழாச் சிறப்பு மலரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளியிட்டு வைக்க அதனை பாடசாலையின் முன்னாள் அதிபர் முத்துக்குமாரசாமி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஏனையோருக்கு சிறப்புப் பிரதிகளை மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் பத்மநாதன் வழங்கினார்.

அங்கு மேலதிக் கல்விப் பணிப்பாளர் செல்வரத்தினம் தனதுரையில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட சிறார்களின் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு உழைத்துக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும் இந்தப் பிரதேசத்தில் மின்சாரம் நீர் முதலான அடிப்படை வசதிகளை அமைச்சர் அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளதுடன் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு பெற்று வளமாக வாழ வேண்டும் என்பதிலும் சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்விச் சமூகத்தினர் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’