அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இதுவரை உயர் பாதுகாப்பு வலயங்களாக காணப்பட்ட இரு பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் பாவனைக்கும் வழங்கப்பட்டன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றையதினம் காலையில் இடம்பெற்ற மேற்படி முக்கியத்துவமிக்க நிகழ்வுகளில் வேலணை வங்களாவடி முதல் வேலணை மத்திய கல்லூரி வரையான பிரதேசம் விடுவிக்கப்பட்டதுடன் வேலணை ஊர்காவற்றுறை பிரதான வீதி திறந்துவிடப்பட்டது. மேலும் மண்டைதீவு மத்தி பிரதேசம் விடுவிக்கப்பட்டதுடன் மண்டைதீவு பிரதான வீதியும் போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்டன.
இவை தொடர்பான முக்கிய நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி வடபிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் எஸ்.எம்.ஏ.வீரசேகரா தீவக கடற்படைக் கட்டளைத் தளபதி கப்டன் டி.எல்.எம்.ஏ.திசாநாயக்ககா தீவக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லலித் பிரேமரட்ண ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் சிறிமோகனன் வேலணை பிரதேச செயலாளர் நந்தகோபாலன் உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் சமூகமளித்திருந்தனர்.
வேலணை வங்களாவடிச் சந்தியில் இடம்பெற்ற முதல் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் நாடாவினை வெட்டி வேலணை ஊர்காவற்றுறை பிரதான வீதியை திறந்துவைத்ததுடன் 778ம் இலக்க பஸ் வண்டியைத்தானே செலுத்தி பஸ் போக்குவரத்துச் சேவையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இச்சமயம் முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் மேற்படி பஸ்ஸில் பயணம் மேற்கொண்டமை விசேட அம்சமாகும். இதேபோன்று மண்டைதீவு மத்தியில் பிரதான வீதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் நாடாவினை வெட்டி திறந்து வைத்ததுடன் யாழ். - மண்டைதீவு 781 வது இலக்க பஸ்ஸினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தானே செலுத்தி பஸ் போக்குவரத்துச் சேவையினை ஆரம்பித்து வைத்தார். இவ்விரு வீதிகளும் சுமார் மூன்று தசாப்த காலத்தின் பின் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீதிகள் திறப்பினை தொடர்ந்து அந்தந்தப் பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் இடம்பெற்றன. இக்கூட்டங்களுக்கு தலைமை வகித்து உரையாற்றிய வடபிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் எஸ்.எம்.ஏ.வீரசேகரா இவ்வளவு காலமும் இவ்வீதிகள் மூடப்பட்டிருந்ததன் மூலம் பொதுமக்கள் பட்ட கஷ்டங்களையும் மனவேதனைகளையும் நான் அறிவேன். அதே மனவேதனை எமக்கும் உண்டு. ஆயினும் நம்பிக்கை ஏற்படும் நிலைமை வரும் வரை காத்திருந்தோம். பல தடவைகள் அமைச்சரும் ஆளுநரும் விடுத்த வேண்டுகோள்களை அடுத்து இவ்வீதிகள் திறக்கப்பட்டுள்ளன. ஐம்பது வருங்களுக்கு மேற்பட்ட உறவு கடற்படையினருக்கும் தீவக மக்களுக்கும் இடையே உண்டு. எனவே எமது நம்பிக்கையினை தொடர்ந்து பாதுகாப்போம் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி அவர்கள் இன்று ஓர் இனிய நாள். உங்களது நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ். கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தியின்பால் அதிக அக்கறை காட்டி வருகின்றார். கடற்படைத் தளபதி கேட்டுக்கொண்டபடி உங்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி நம்பிக்கையினை கட்டியெழுப்புங்கள் எனக்கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வுகளில் பிரதான உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு வீதிகள் திறக்கப்பட்ட இந்த மகிழ்ச்சியை நானும் ஆளுநரும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றோம். இருபது வருட அழிவுகளில் இருந்து ஒரே இரவில் இயல்பு நிலைமையினை ஏற்படுத்தி விடமுடியாது. கட்டம் கட்டமாக இயல்பு நிலையைத் தோற்றுவிக்கும் ஏற்பாட்டின் மற்றுமோர் நடவடிக்கையே இவ்வீதிகள் திறப்பாகும். இது எமது அரசாங்கம். இனிமேல் இங்கு உயர்பாதுகாப்பு வலயமென்று ஒன்றில்லை. இராணுவ முகாம்கள் தேவைகருதி இருக்கலாம். அண்மையில் ஜனாதிபதி தலைமையில் வவுனியாவில் நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தின் போதும் இக்கருத்தையே நான் முன்வைத்தேன் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாம் பெற்ற இந்த சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். இதனை நாம் எவருக்கும் தாரைவார்த்துக் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்ததுடன் இந்த நம்பிக்கையினை பாதுகாத்துக் கொள்ளுவது தீவக மக்களாகிய உங்கள் பொறுப்பு என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வுகளில் பிரதேச மக்களின் குறைபாடுகள் கோரிக்கைகளையும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக மண்டைதீவு மக்கள் தமது பிரதேச போக்குவரத்து மின்சார குறைபாடுகள் தொடர்பாக தெரிவித்தபோது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட அமைச்சரவர்கள் போக்குவரத்திற்காக மேலதிக பஸ் ஒன்றினை உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்ததுடன் நவம்பர் மாத நடுப்பகுதியில் நிரந்தர மின்சார விநியோகமும் ஏற்படுத்தப்படும் என்பதை பலத்த கரகோஷத்தின் மத்தியில் தெரியப்படுத்தினார்.
இதுவரை உயர் பாதுகாப்பு வலயங்களாக காணப்பட்ட இரு பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் பாவனைக்கு இரு பிரதான வீதிகளும் திறந்துவிடப்பட்ட நிலையில் பிரதேச பொதுமக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி வடபிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் எஸ்.எம்.ஏ.வீரசேகரா தீவக கடற்படைக் கட்டளைத் தளபதி கப்டன் டி.எல்.எம்.ஏ.திசாநாயக்ககா ஆகியோருக்கு மலர்மாலைகள் அணிவித்து தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’