வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்றையதினம் கிளிநொச்சியில் ஒன்றுகூடியது

மிழ்க் கட்சிகளின் அரங்கமானது திட்டமிட்டபடி இன்றையதினம் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி பணிமனையில் ஒன்றுகூடியது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி தலைமையில் இடம்பெற்ற இன்றைய அரங்கத்தின் ஒன்று கூடலில் கடந்த சந்திப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான முன்னேற்ற நிலைமை குறித்து ஆராயப்பட்டதுடன் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லவேண்டிய விடயங்கள் குறித்து காத்திரமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முக்கியமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக முக்கியமான கவனம் செலுத்தப்பட்டதுடன் பொதுமக்களின் காணிப்பிரச்சினை குறித்தும் ஆராயப்பட்டது. சொந்த காணிகள் மற்றும் காணி உறுதிகள் இல்லாதோரை தற்போது அமுல்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்தில் இணைக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன் இது தொடர்பாக மாவட்ட மட்டத்தில் காணிக் கச்சேரி நடாத்தப்பட்டு தீர்வுகாண்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பொதுமக்களின் மீள்குடியேற்றம் மற்றும் காணிப்பயன்பாடு தொடர்பாக தத்தம் அறிக்கைகளை சமர்ப்பிப்பதன் மூலம் அவை தொகுக்கப்பட்டு இறுதி அறிக்கையுடன் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அவற்றுக்கு தீர்வு காண்பதெனவும் பிரதிநிதிகள் முடிவு மேற்கொண்டனர். அத்துடன் இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள ஐம்பதாயிரம் வீட்டுத்திட்ட அமுலாக்கம் அதன் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டன.

மற்றொருபுறம் பொதுமக்கள் எதிர்நோக்கும் அன்றாட அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு மாவட்ட நிர்வாக ரீதியில் தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதெனவும் முடிவுசெய்யப்பட்டது. அத்துடன் கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பலர் தமது உறவுகளின் இறப்பு சான்றிதழ் பெறமுடியாத நிலைமை காணப்படுவதுடன் ஒரு தொகுதி பிறப்புகளும் பதியப்படாத நிலையில் பதிவுகளை முறைப்படி மேற்கொள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதென அரங்க பிரதிநிதிகள் தீர்மானித்தனர். இச்சமயம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நஷ்டஈட்டினை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் தற்சமயம் தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு வேலைவாய்ப்பு என்பன வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த காலங்களில் புலிகளின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட ஏனைய கட்சிகள் இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வதெனவும் முடிவுசெய்யப்பட்டது.

இன்றைய தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தின் நிறைவாக அடுத்த அரங்க சந்திப்பினை இம்மாதம் முப்பதாம் திகதி கொழும்பில் நடாத்துவதெனவும் பிரதிநிதிகள் தீர்மானித்தனர். இன்றைய சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் அதன் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ரி.திருஞானசம்பந்தன் மற்றும் அ.முருகேசு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் தோழர் புரட்சிமணி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் பீ.நித்தியானந்தம் சிறி டெலோ சார்பில் பீ.உதயராசா ஜீ.சுரேந்திரன் புளொட் அமைப்பின் சார்பில் ஆர்.ராகவன் சு.சதானந்தம் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் சார்பில் ஆர்.ஞானசேகரன் எஸ்.பேரின்பநாயகம் மற்றும் றெமிஜஸ் பெரேரா மனித உரிமைகளுக்கான இல்லத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஷெரீன் சேவியர் மற்றும் மேகலா ஆகியோர் பங்குகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’