கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றதுடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நல்லூர் பல நோக்கு கூட்டுறவு சமூகத்தினரால் இன்று வரவேற்பு விழா நடாத்தப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நல்லூர் பிரதேச செயலாளரும் நல்லூர் பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவருமான செந்தில்நந்தனன் தலைமையில் நல்லூர் பல நோக்கு கூட்டுறவு சங்க தலைமைப்பணிமனையில் இன்று மதியம் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் கூட்டுறவு உதவி ஆணையாளர் அருந்தவநாதன் சங்கத்தின் உபதலைவர் அம்பிகைபாகன் நெறியாளர் குழு அங்கத்தவர் சுப்பிரமணியம் பொதுமுகாமையாளர் கவீந்திரதாஸ் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் தொகுதி பொறுப்பாளர் அம்பலம் ரவீந்திரதாசன் ஆகியோருடன் பெருமளவு கூட்டுறவாளர்களும் பணியாளர்களும் பங்குகொண்டனர்.
பொதுமுகாமையாளர் கவீந்திரதாஸ் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான வரவேற்பு விழா நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளரும் நல்லூர் பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவருமான செந்தில்நந்தனன் தலைமையுரையாற்றினார். தொடர்ந்து உபதலைவர் அம்பிகைபாலன் பணியாளர் சார்பில் ஞானரூபன் நெறியாளர் குழு அங்கத்தவர் சுப்பிரமணியம் கூட்டுறவு உதவி ஆணையாளர் அருந்தவநாதன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் ஆகியோரும் உரையாற்றினார்கள். சுமார் பதினைந்து மாதங்களுக்கு முன்னர் நிர்வாகச் சீர்கேட்டினாலும் மோசடி நடவடிக்கைகளினாலும் மோசமான நிலையில் காணப்பட்ட நல்லூர் பல நோக்கு கூட்டுறவு சங்கமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக புதிய இயக்குனர் சபை தெரிவுசெய்யப்பட்டு பொதுமுகாமையாளராக சிரேஷ்ட கூட்டுறவாளர் கவீந்திரதாஸ் நியமிக்கப்பட்டதுடன் தற்சமயம் இலாபம் உழைக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளதை அங்கு உரையாற்றிய பலரும் பெருமையுடன் பாராட்டினார்கள்.
இங்கு சிறப்புரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்சமயம் சிறப்பாக செயற்பட்டுவரும் நல்லூர் கூட்டுறவு சமூகத்தினருக்கு தமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொண்டார். மேலும் கூட்டுறவாளர்கள் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய அமைச்சரவர்கள் சமூக பிரச்சினைகளிலும் தமது கருத்துக்களை வெளியிட வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். முன்னர் வாய்மூடி மௌனமாக இருந்தபடியினால்தான் பெருமளவு அழிவுகளும் இடப்பெயர்வுகளும் ஏற்பட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் மேற்கொண்ட சரியான நடவடிக்கைகள் மூலம் தற்சமயம் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருப்பதை பாதுகாத்துக் கொண்டு மேலும் முன்னேற வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டார். நிகழ்வின் நிறைவாக நல்லூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினால் கையளிக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான மகஜரைப் பெற்றுக்கொண்ட அமைச்சரவர்கள் அக்கோரிக்கைகள் நிறைவேற்ற ஆவணசெய்யப்படும் என உறுதியளித்ததுடன் இலகுகடன் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’