நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் இடம்பெற்ற இனவன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொலிஸ் முறைப்பாட்டுப் பதிவுப் பிரதிகளைப் பொலிஸார் வழங்க மறுப்பதன் காரணமாக அந்த மக்கள் நஷ்ட ஈடுகளையோ ஏனைய கொடுப்பனவுகளையோ பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் தோட்ட நிர்வாகம் கூட அந்த மக்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
கடந்த வாரம் நிவித்திகல குக்குலகலத் தோட்டப் பிரதேசத்துக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கத்திடம் இந்த விடயங்களை அந்த மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தாவது,
குக்குலகல தோட்டத் தமிழ் மக்களுக்கு எதிரான இன வன்முறை இடம்பெற்று நாட்கள் பல கடந்த நிலையிலும் அந்த மக்கள் இன்னும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். பதற்றமான ஒரு சூழலே அங்கு நிலவுகிறது. வெளியார் எவராவது அந்தத் தோடத்துக்குச் சென்றால் பெரும்பான்மை இனத்தவர்கள் சந்தேகக் கண்ணோடு நோக்குவதுடன் பின்னர் பல கேள்விகளையும் அந்த மக்களிடம் கேட்கின்றனர்.
இந்த வன்முறை காரணமாக 25 குடும்பங்கள் முழுமையாப் பாதிக்கப்பட்டிருந்தன. இவற்றில் 10 க்கும் குறைந்த குடும்பங்களே இதுவரை சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளன. ஆனால், அவற்றிலும் முழுமையான குடும்ப உறுப்பினர்கள் இல்லை.
அந்த மக்கள் தற்போது தொழில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். இவர்கள் இறப்பர் பால் வெட்டும் தொழிலிலேயே ஈடுபட்டு வந்தனர். ஆனால், இன்று அந்த மக்களிடம் இறப்பர் பாலை வெட்டுவதற்கான கருவிகள் இல்லை. இதனால் அவர்களது தொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழிலாளர்கள் சிறு சிறு கடைகளையும் நடத்தி வந்தனர். ஆனால், அவை அனைத்தையும் அந்த மக்கள் இழந்த நிலையிலேயே வாழ்கின்றனர். எனத் தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மட்டுமே வந்து தம்மை பார்வையிட்டதாகவும், எந்த ஒரு தமிழ் அமைச்சரும் வரவில்லை என மக்கள் கவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’