விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அரசு தடை நீடிப்பு செய்து வருகிறது. அதன்படி, கடந்த மே மாதம் 14 ஆம் தேதி இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த ஆணை, நடுவர் மன்றத்தில் உறுதி செய்யப்பட்ட பிறகே அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வரும்.
அதற்காக, நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான ஒருநபர் நடுவர் மன்றம் விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் நடந்த விசாரணையில், தானும் விடுதலைப் புலிகள் சார்பில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று வைகோ வாதிட்டார். ஆனால், அவரது வாதத்தை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
அதையடுத்து, செவ்வாயன்று சென்னையில் நடைபெற்ற நடுவர் மன்றத்தின் விசாரணையில் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் சார்பில் மனுவும் தாக்கல் செயய்ப்பட்டது .'அரசியல் பழிவாங்கல்’
மதிமுக பொதுச் செயலர் வைகோ |
மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் ஆஜராகலாம் என்று மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் உள்ளதாகவும், அதனால், இந்த நடுவர் மன்றத்தில் ஆஜராக தங்களுக்கு உரிமை உண்டு எனவும் வாதிட்டார்.
அரசாணையில் அதுபோன்ற குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் சட்ட விதிகள் தான் செல்லுபடியாகும் என்றும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனஞ்ஜெயன் வாதிட்டார்.
லண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஜோசப் ராபின்சன் என்பவர் சார்பிலும் தான் ஆஜராவதாக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறினார். அதற்காக, ஜோசப் ராபின்சன் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.
தமிழக அரசு வழக்கறிஞர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதே நேரத்தில், அந்த நபர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கறிஞரின் கோரிக்கை நிராரிக்கப்பட்டது.
தமிழக காவல் துறையின் சார்பில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதையடுத்து, நெடுமாறன் உள்ளிட்ட மற்ற அமைப்பினர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையைத் தொடரக் கூடாது என வாதிட முடியுமா என்ற தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். புதன்கிழமை அதுதொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடுவர் மன்றத்தின் அடுத்த விசாரணை, இந்த மாதம் 20-ஆம் தேதி ஊட்டியில் நடைபெற உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’