சென்னை விமான நிலையத்தில் நவரத்தின கற்களைக் கடத்தி வந்த இலங்கை வாலிபர் ஒருவர் பொலிசாரிடம் பிடிபட்டார்.
இலங்கையில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் வாலிபர் ஒருவர் வயிற்றில் மறைத்து வைத்து நவரத்தின கற்களைfகடத்தி வருவதாக புறநகர் பொலிஸ் கமிஷனருக்குத் தகவல் கிடைத்தது.
கடத்தல் ஆசாமியை பிடிப்பதற்காக துணை கமிஷனர் வரதராஜுலு, கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் குப்புசாமி, இன்ஸ்பெக்டர் ஆரோக்யரவீந்திரன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படைகள், தீவிரமாக கண்காணித்தபோது விமான நிலைய வாகனம் நிறுத்தும் பகுதியில் சந்தேகத்துக்கிடமாகச் சுற்றி திரிந்த முகமதுஷபி (41) என்பவரை பிடித்தனர். இலங்கையை சேர்ந்த இவர்தான் நவரத்தின கற்களை கடத்தி வந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஷபியை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற பொலிசார் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர். வயிற்றுக்குள் 48 நிரோத் பாக்கெட்டுகளில் 2 ஆயிரத்து 65 நவரத்தின கற்கள் இருக்கக் கணுபிடிக்கப்பட்டன.
இதனை வெளியில் எடுப்பதற்குப் பொலிசார் முயற்சி மேற்கொண்டனர். வாழைப்பழம் போன்றவை அவருக்குக் கொடுக்கப்பட்டன. சுமார் 6 மணி நேரம் காத்திருந்த பின்னர் வயிற்றில் இருந்த ரூ.1 1/2 கோடி மதிப்பிலான நவரத்தின கற்கள் வெளியில் எடுக்கப்பட்டன.
இவற்றைக் கைப்பற்றிய பொலிசார் சுங்கத்துறையினரிடம் இதனை ஒப்படைக்கவுள்ளனர்.
ஒருமுறை இப்படிக் கடத்தலில் ஈடுபட்டால் ரூ.10 ஆயிரம் கமிஷன் கிடைக்கும் என்று ஷபி பொலிசாரிடம் கூறியுள்ளார். இதற்கு முன்பு 2 முறை இதேபோன்று கடத்தலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஷபி கடத்திவரும் பொருட்களை மண்ணடி லாட்ஜில் வைத்து குமார், சபீர், ரபீக் ஆகிய 3 பேர் வாங்கிச் சென்றுள்ளனர். இவர்கள் யார், இவர்களுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’