வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 18 அக்டோபர், 2010

பொன்னகரில் 42 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டத்துடன் காணிகள் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் நடவடிக்கை

கி ளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் சட்டரீதியான ஆவணங்கள் இல்லாத நிலையில் காணிகளை இழந்த 42 குடும்பங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களால் வீட்டுத்திட்டத்துடன் கூடிய 20 பேர்ச் பரப்பளவு காணி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்று (16) கிளிநொச்சி பொன்னகர் பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் தலைமையில் மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கரைச்சிப் பிரதேச செயலர் திருமதி சுலோஜினி கரைச்சிப் பிரதேச காணி அலுவலர் அந்தப் பிரதேச கிராம அலுவலர் அடங்கிய குழுவினர் அம்மக்களின் நிலைமைகளை நேரடியாக கேட்டும் பார்த்தும் அறிந்துகொண்டதோடு அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
அந்த வகையில் செட்டிகுளம் நலன்புரி நிலையங்களிலிருந்து வருகைதந்து கடந்த நான்கு மாதங்களாக தற்காலிக இடம் ஒன்றில் வசித்து வருகின்ற 42 குடும்பங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் ஏ9 வீதிக்கு அண்மையாக சிவபாத கலையகப் பாடசாலைக்கு அருகில் வீட்டுத்திட்டத்துடன் கூடிய காணிகள்; வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அத்தோடு இந்தத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தி அம்மக்களுக்கு காணிகளை வழங்குமாறு அரச அதிபர் பிரதேச செயலர் அவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.
அப்பிரதேசத்திற்கான நீர் மின்சாரம் வீதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமான வசதிகளையும் ஏற்படுத்தி தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு புதிதாக திருமணம் செய்த அந்தப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் காணி கோரி பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது.
காணிகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அம்மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் இந்த விரைவான முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’