யுத்தத்தால் கணவனை இழந்தவர்களுக்கு சகல வழிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார்
.இன்று (26) பரந்தன் நகர கிராமசேவையாளர் பிரிவு மக்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பரந்தன் நகர கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய தேவைகள் மற்றும் பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் தெரிவித்தனர்.
அந்த வகையில் அக்கிராம மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகள் பலவற்றை தெரிவித்தனர். இதில் குறிப்பாக அக்கிராமத்தில் வசிக்கின்ற 640 குடும்பங்களில் 360 குடும்பங்களுக்கு காணி இல்லையெனவும் அதற்கு சிறந்ததொரு தீர்வினைப் பெற்றுத் தருமாறும் கோரப்பட்டது.
மிக நீண்டகாலமாக சில காணிகளில் அம்மக்கள் வசித்து வருகின்றமையால் அம்மக்களுக்கே அக்காணிகளை வழங்குவது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் பிரதேச செயலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் காணிக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டு அம்மக்களுக்கு அக்காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை வழங்கினார்.
மேலும் இக்கிராமத்திற்கான வீதி முன்பள்ளி மற்றும் மக்களின் தற்காலிக நிரந்தர வீடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்பாக அவர்களது உடனடி அடிப்படைத் தேவைகள் சிலவற்றை பூர்த்தி செய்வது தொடர்பாகவும் தான் கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிராம அலுவலர் அம்பிகைபாலன் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மாதர் சங்கத் தலைவி மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’