இலங்கை இந்திய உறவின் ஓர் அங்கமாக இந்திய மக்களின் சார்பில் இந்திய அரசாங்கத்தினால் யாழ் மாநகர சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஐந்து நடுத்தர பஸ்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று கையளித்தார்
.இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்களிடம் மேற்படி பஸ்கள் யாழ். மாநகரசபை வளாகத்தில் வைத்து வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட பஸ்களின் திறப்புக்கள் சாரதிகளிடம் தனித்தனியாக கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக பஸ் ஒன்றினை இயக்கிய அமைச்சரவர்கள் தானே அதனைச் செலுத்தி சேவையினை ஆரம்பித்து வைத்தபோது அங்கு திரண்டிருந்தோர் கரகோஷம் செய்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
தற்சமயம் யாழ்.மாநகரசபை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மேற்படி பஸ்கள் மூலம் யாழ் மாநகர போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இ.போ.ச. பஸ் சேவை இல்லாத இடத்தில் இருந்து யாழ் நகரத்திற்கு சேவை வழங்கல் இடம்பெறுவதுடன் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை சேவை யாழ்ப்பாணம் - கச்சேரி மற்றும் கல்வியங்காடு சந்தி வரையான சேவை யாழ்ப்பாணம் - காக்கைதீவு மற்றும் ஓட்டுமடம் வரையான சேவை யாழ்ப்பாணம் - கே.கே.எஸ்.வீதி மற்றும் நாச்சிமார் கோவில் வரையான சேவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் திருநெல்வேலி சந்தை மற்றும் கல்வியங்காடு வரையான சேவை பாடசாலை மாணவருக்கு பின் தங்கிய இடத்திலிருந்து சேவை வழங்கல் யாழ் பஸ் நிலையத்திலிருந்து மாநகரசபை அலுவலக உத்தியோகத்தருக்கு சேவை வழங்கல் ஆகியவற்றுடன் பொது வைபவங்கள் தனியார் வாகன சேவை மற்றும் மாநகரசபையின் பயன்பாட்டுக்கும் பதிலீட்டு சேவைக்கும் மேற்படி பஸ்கள் பயன்படுத்தப்படும் என யாழ்.முதல்வர் தெரியப்படுத்தினார்.
இந்நிகழ்வில் யாழ்.மாநகர சபை ஆணையாளர் மு.சரவணபவ மாநகரசபை உறுப்பினர்கள் மாநகரசபை உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’