யாழ்ப்பாணத்திலுள்ள தனது பணிமனையில் இன்றையதினம் (16) பொதுமக்கள் குறைகேள் நிகழ்வினை நடாத்திய பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெருமளவு பொதுமக்களினதும் பொது அமைப்புக்களினதும் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்றி வைத்தார்
.இன்று காலை முதலே பொதுமக்களுடனான சந்திப்புக்களை நடாத்திய அமைச்சரவர்களை நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜே 89 பொதுமக்கள் கோப்பாய் மத்தி பொதுமக்கள் கொட்டடி கற்குளம் பொதுமக்கள் ராசாவின் தோட்ட ஒழுங்கை குடியிருப்பு பொதுமக்கள் ஆகியோர் தமக்குரிய வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டனர். இது குறித்த விபரங்களை ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறிப்பிட்ட காணி உறுதிகள் தொடர்பாகவும் வீடமைப்பு அமைச்சு மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் உதவிகளைப்பெற்று வீடமைப்பது தொடர்பாகவும் உதவி வழங்குவதாக உறுதியளித்தார். மேலும் யாழ். மத்திய கல்லூரி அபிவிருத்தி தொடர்பாகவும் உடற்கல்வி டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்திசெய்த மாணவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பாகவும் எழுவைதீவு கடற்றொழில் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாகவும் பட்டதாரிகளின் கோரிக்கைகள் தொடர்பாகவும் வடமராட்சி தேவா கல்வி நிறுவன அபிவிருத்தி சம்பந்தமாகவும் தனித்தனியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரியப்படுத்தினார். அத்துடன் குறிஞ்சாதீவு உப்பள உற்பத்தியை ஆரம்பிப்பது தொடர்பாக அதன் பணியாளர்களுடன் கலந்துரையாடி பிரேரணைத்திட்டம் ஒன்றினைத் தயாரிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம் பொது அமைப்புகளுடனான சந்திப்புக்களுக்கு மேலதிகமாக நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களின் தனிப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’