மருத்துவமனையில் பணிபுரியும் அத்தனை பணியாளர்களும் தமக்கான கடமைகளை ஊதியத்திற்கு மட்டும் செய்யாமல் சேவையை முதன்மையாகக் கொண்டு செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர்கள் தாதியர்கள் மற்றும் விடுதிகளின் மேற்பார்வைகளுடனான சந்திப்பின்போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது சுத்தம் சுகாதாரம் சீர்கெட்டுப் போயுள்ளதாகவும் இதற்கான காரணம் கண்டறியப்பட்டு அது நிவர்த்தி செய்யப்பட வேண்டிய நிலையிலுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு நூறு பேர் வரையில் சுத்திகரிப்புப் பணிக்கென நியமிக்கப்படவுள்ளதாகவும் இந்த நிலையில் மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவரும் தமக்கான கடமைகளை ஊதியத்திற்கு மட்டும் செய்யாமல் மக்களுக்கான சேவையையே ஒவ்வொருவரும் சிரமேற்கொண்டு சமூகப் பணிபுரிய வேண்டும்.
அதுமட்டுமன்றி இங்கு முறைகேடாக சட்டத்திற்கும் நியாயத்திற்கும் முரணாக யாராவது செயற்படுவார்களானால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விடுதிகளின் மேற்பார்வையாளர்கள் தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து குறிப்பாக தாதியர் விடுதி ஆட்பற்றாக்குறையால் தமக்கு ஏற்படும் இடர்பாடுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்சினைகளை அமைச்சரிடம் எடுத்து விளக்கினர்.
இதன் போது கொழும்பில் எதிர்வரும் 27ம் திகதி சுகாதார அமைச்சருடன் நடைபெறவுள்ள உயர்மட்ட சந்திப்பின்போது உங்களது கோரிக்கைகளும் தேவைகளும் கருத்தில் கொண்டு பேசப்படுமென்றும் நம்பிக்கையோடு கடமைகளை ஆற்றுமாறும் அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பில் மருத்துவமனைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா மருத்துவர்களான ரவிராஜ் பானந்தராஜா மற்றும் மருத்துவமனை உயரதிகாரிகள் மின்சார சபை முத்துரட்ணானந்தம் யாழ் மாநகர முதல்வர் முன்னாள் அரச அதிபர் கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பை அடுத்து மருத்துவமனையின் உள் வெளிப்புறங்களையும் மருத்துவமனைக்கான சிற்றுண்டிச்சாலையையும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.
இதனிடையே அமைச்சர் அவர்கள் இலங்கை மின்சார சபை இயங்கி வரும் பிரதான மின்பிறப்பாக்கி வைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குச் சென்று அதன் சுற்றுப் புறத்தையும் பார்வையிட்டதுடன் தாதியர் மருத்துவர்களுக்கான விடுதிகள் அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்து கொண்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’