வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 22 செப்டம்பர், 2010

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப்பொருட்களை விற்க முயன்ற கிராம சேவகர், கூட்டுறவு முகாமையாளர் கைது

ட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் வழங்கிய அரிசி மற்றும் கோதுமை மா போன்ற உணவுப் பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்ற கிராமசேவை உத்தியோகத்தர், பலநோக்கு கூட்டுறவுச்சங்க முகாமையாளர், சமாதான நீதிவான் ஆகியோர் இன்று புதன்கிழமை காலை வெல்லாவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
.13ஆம் கொலணி, சங்கர்புரம் ஆகிய கிராம மக்களுக்கு வழங்கப்படவிருந்த உணவுப் பொருட்களே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களால் கடத்தப்பட்ட 954 கிலோ கிராம் கோதுமை மா மற்றும் 700 கிலோ அரிசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு குடும்பத்திற்கு 7.5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்க வேண்டிய நிலையில் 1 கிலோவையே வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் திலக் விஜயகுணவர்த்தன பொலிஸாரைப் பணித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெல்லாவெளி பிரதேச செயலாளர் உருத்திரன் உதய சிறிதர் தெரிவித்தார்.
பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மேற்படி நபர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரியிருந்தபோதும், சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதில் சந்தேகம் கொண்ட பொது மக்கள் இன்றைய தினம் மண்டூரிலுள்ள வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் முன்னால் திரண்டு நின்றனர்.
அத்துடன், மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளரிடம் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளனர். இதனையடுத்து, உடனடியாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடனும் தொடர்பு கொண்ட மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயஜமூர்த்தி முரளிதரன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதேநேரம் இவ்விடயம் தொடர்பாக முழுமைமையான விசாரணை நடத்தப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
உலக உணவுத்திட்டத்தால் வழங்கப்பட்ட பொருள்கள் யாவும் ஒரு குடும்பத்திற்கு 7.5 கிலோகிராம் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் சங்க முகாமையாளர் கிராம சேவையாளர் ஊடாக வெல்லாவெளி பிரதேச செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’