வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தோழர் இரத்தினசபாபதி அவர்கள் சிறந்த ஒரு திசை வழி காட்டி!...

தோழர் இரத்தினசபாபதி அவர்களின் அனுதாப பிரேரணையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (24) ஆற்றிய உரை
.துப்பாக்கி வேட்டுக்களை விடவும் சொற்கள் ஒவ்வொன்றும் வலிமையானவை. வெடி குண்டுகளை விடவும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் வீரியம் நிறைந்தவைகள்.
அந்த வலிமையான சொற்களுக்கும் வீரியம் நிறைந்த கருத்துக்களுக்கும் சொந்தக்காரரான தோழர் இரத்தினசபாபதி அவர்களுக்கு இந்த நாடாளுமன்றம் மரியாதை செலுத்துவது குறித்து இந்த நாடாளுமன்றத்திற்கு நான் முதலில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.
எம்மைப் பொறுத்தவரையில் எமக்கு காலத்திற்கு காலம் வழி காட்டிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் கௌரவ இரட்ணசபாபதி அவர்களின் வழி காட்டல் என்பது தவிர்க்க முடியாத ஒரு காலச்சூழலில் மிகவும் காத்திரமான வழி காட்டலை எமக்கு வழங்கியிருக்கின்றார்.
தமிழ் மக்களின் அரசியலுரிமை போராட்டமானது புதிய உத்வேகத்தை பெற வேண்டிய ஒரு காலச்சூழலில் அதன் கட்டாயத்தை உணர்ந்து கௌரவ இரட்ணசபாபதி அவர்கள் ஆற்றியிருந்த ஆற்றல் மிகு பங்களிப்பு என்பது எமது வரலாற்றில் அழியாத பதிவாக எழுதப்பட்டிருக்கின்றது
அது போலவே மாறி வந்திருந்த எமது மக்களின் மன நிலைகளைப் புரிந்து கொண்டவராக உலகத்தின் போக்கையும் அதற்கான நடைமுறை யதார்த்தங்களையும் புரிந்து கொண்டவராக தோழர் இரட்ணா அவர்கள் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சனைக்கு ஜனநாயக வழிமுறை ரீதியாகவே தீர்வு காண வேண்டும் என்று எண்ணியிருந்ததும் எமக்கு அவர் மீதான பற்றுதலை மேலும் உருவாக்கியிருந்தது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்ததை அடுத்து எம்மை போல் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியிருந்த தோழர் இரட்ணா அவர்கள் 40000 மக்களின் விருப்பு வாக்குகளை பெற்று இந்த நாடாளுமன்றத்திற்கான பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
கௌரவ இரட்ணசபாபதி அவர்கள் அன்றைய ஆளும் அரசுக்கு எதிராக உரிமைப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவராக இருந்த போதிலும் அவர் ஆயுதங்கள் மீது மோகம் கொண்டவராக ஒரு போதும் இருந்தவரல்ல.
தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் என்புது அன்றைய ஆளும் அரசுக்கு எதிராக இருக்க வேண்டுமே என்று நினைத்தவரே ஒழிய அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிராக இருக்க வேண்டும் என்று கருதியவர் அல்ல�
இலங்கைத்தீவிலும் சரி அதற்கு அப்பால் இருக்கும் அயலுலக அரசியல் சூழலிலும் சரி அதையும் கடந்து சர்வதேச அரங்கிலும் சரி எதிரிகள் யார்?... நண்பர்கள் யார்?... என்ற தெளிவான பார்வையை அவர் கொண்டிருந்தவர்.
அதன் காரணமாகவே அன்றைய ஆளும் அரசுகளால் ஒடுக்கப்படுகின்ற அனைத்து இன சமூக மக்களின் பக்கமும் அவர் தனது பார்வையை செலுத்தியிருந்தவர்.
மதத்தால் இந்து ஆனாலும், மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனும், தீரச்சைவன் ஆனாலும் ஈழத்தழிழர் ஈழவரே. அவர் எங்கிருந்தாலும் எம்மவரே.
இதுவே தோழர் இரட்ணா அவர்களின் கருத்தாகும். இதுவே பரந்து பட்ட மக்கள் நலன் சார்ந்து அவர் சிந்தித்திருந்த அவரது உண்மையுள்ள தத்துவமாகும்.
தமிழ் முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் என்று அனைத்து மக்கள் சமூகத்தையும் நேசித்திருந்த கௌரவ இரத்தினசபாபதி அவர்கள் அதற்கான தெளிவான கொள்கையினையும் வகுத்து அதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தவர்.
எமது உரிமைப்போராட்டம் என்பது தனிநபர் பயங்கரவாதமாக அன்றி ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்டதான ஸ்தாபன வடிவமாக உருவாக வேண்டும் என்று கருதி அதை நடைமுயைப்படுத்தியும் அவர் காட்டியிருந்தவர்.
அதன் வெளிப்பாடுதான் ஈரோஸ் என அழைக்கப்படுகின்ற ஈழப்புரட்சி அமைப்பாகும். ஈரோஸ் அமைப்பை உருவாக்கியிருந்த கௌரவ இரத்தினசபாபதி அவர்கள் அந்த அமைப்பை ஒரு தெளிவான சிந்தனையோடு வழி நடத்திச்சென்றிருந்தவர் என்பதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
ஆனாலும் ஒரு காலச்சூழலின் பின்னர் தவறான சில சக்திகள் தம்மை ஈரோஸ் அமைப்பினர் என அடையாளம் காட்டிக்கொண்டு தவறான பாதை நோக்கி சென்றிருந்ததையும் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
கௌரவ இரத்தினசபாபதி அவர்கள் அரசியல் சமூக விஞ்ஞான தத்துவங்களை ஏற்றுக்கொண்டு தெளிவாக கற்றிருந்ததோடு அந்த உண்மையுள்ள தத்துவமே சகலருக்கும் வழி காட்டலாக இருக்க வேண்டும் என்றும் உறுதியாக வலியுறுத்தி வந்திருந்த ஒருவர்.

அந்த அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவனாகவும் பிரதான தளச்செயற்பாட்டாளராகவும் இருந்து எமது மக்களுக்காக உழைத்து வந்திருக்கின்றேன்.

வெறுமனே பழிக்கு பழி என்றும், இரத்தத்திற்கு இரத்தம் என்றும் பழி வாங்க வேண்டும் என்ற தவறான சிந்தனைகள் எமது மக்களை உசுப்பேற்றியிருந்த ஒரு அரசியல் சூழலில்...

அன்றைய பெருந்தேசிய வாதத்திற்கு எதிராக பிற்போக்கான ஒரு குந்தேசிய வாதத்தையே வளர்த்து அதில் தமது சுயலாப எண்ணங்களை வளர்த்து வந்த ஒரு சூழலில்�.

கௌரவ இரத்தினசபாபதி அவர்களது அரசியல் பிரவேசம் என்பது எமது மக்களுக்கு பெரும் வரப்பிசாதமாகவே அமைந்திருந்தது. எம் போன்றவர்களுக்கு அவரது அரசியல் பிரவேசம் நம்பிக்கை அளித்திருந்தது.

அவரிடமிருந்து நாம் சரியானவற்றை கற்றிருக்கின்றோம். ஏற்கனவே நாம் பெற்றிருந்த அனுபவங்களுக்கு அவரிடமிருந்து மேலும் தெளிவான சிந்தனைகளை பெற்றிருக்கின்றோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஒரு ஆரம்ப அரசியல் முன்னெடுப்பாக கருதி, அதை ஏற்றக்கொண்டு ஆயுதப்போராட்டம் என்பது எந்த இலக்கையும் இனி பெற்றுத்தரப்போவதில்லை என்று கருதி அழிவு யுத்தம் என்பது எமது மக்கள் மீதான அவலங்களை தொடர்ந்தும் சுமத்தவே வழி கோலும் என்று எண்ணித்துணிந்து கௌரவ இரத்தினசாபாபதி அவர்கள் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியிருந்த தீர்க்கதரிசனங்கள் இன்று சகல தரப்பாலும் உணரப்பட்டிருக்கின்றது.

கௌரவ இரத்தினசபாபதி அவர்கள் இறுதிக்காலத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கிச் செல்ல வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டிருந்தாலும், அவரது உணர்வு பூர்வமான சிந்தனைகளையும் எமது சிந்தனைகளோடு இணைத்துக்கொண்டே நாம் இன்னமும் இடையறாது எமது மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.

அவர் தனது இறுதிக்காலங்களில் கூட என்னோடு தொலை பேசியில் தொடர்பு கொண்டு கதைத்து எமது அரசியல் முன்னெடுப்புகளுக்கு உற்சாகம் தந்திருந்த நிகழ்வுகளையும் இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

நான் நல்ல விதைகளையே விதைத்திருக்கின்றேன், ஆனாலும் நச்சு விதைகளும் எமது மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கின்றன என்றும், நல்ல விதைகளில் நீயே இன்று இடையாறது நின்று நிலைக்கின்றாய் என்றும் எனக்கு தோழர் இரட்ணா அவர்கள் ஆசீர்வாதம் வழங்கியிருந்த நிகழ்வுகளையும் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

உற்சாகம் தரும் அவரது ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொண்டு நாம் அவருக்கு செலுத்துகின்ற மரியாதையானது எமது மக்களுக்கு நிரத்தரமானதும் நீடித்ததுமான ஒரு மகிழ்ச்சியை உருவாக்கி கொடுப்பதேயாகும்.

அதற்காகவே, நான் எமது மக்களை கைவிட்டு எங்கும் ஓடிப்போகாமல் இடையாறாது இந்த மண்ணில் நின்று எமது மக்களுக்காக நடைமுறைச்சாத்தியமான வழி முறையில் உழைத்து வருகின்றேன்.

ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களிடம் உதவும் கரங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவரது கரங்களை எதிர்ப்பு அரசியல் என்ற சுயலாபங்களால் உதறும் கரங்களாக மாற்றி விட நாம் ஒரு போதும் தயாரில்லை.

எமது மக்களை நோக்கி அரசாங்கத்தை அழைத்து வரவும், அரசாங்கத்தை நோக்கி எமது மக்களை நகர்த்திச் செல்லவும் விருப்பமற்ற வெறும் சுயலாப எதிர்ப்பு அரசியலே இன்று வரை அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு பிரதான தடையாக இருந்து வந்திருக்கின்றது.

இத்தகைய தடைச்சுவர்களை உடைத்து நாம் உறவுக்கு கரம் கொடுத்து உரிமைக்கு குரல் கொடுத்து இணக்க அரசியல் வழிமுறையில் நின்று செயலாற்றி வருகின்றோம்.

எட்டாத பழம் புளிக்கும் என்பது போல் இயலாத்தன்மைகளால் எழுகின்ற தூற்றல்கள் குறித்து எமக்கு கவலையில்லை. சுயலாப நோக்கில் எம்மை நோக்கி வீசப்படும் சேறடிப்பு குறித்து எமக்கு அக்கறையில்லை.

பலத்த சூறாவளியை எதிர் கொண்ட போதிலும் எமது கோட்பாடுகளையோ அன்றி எமது நடைமுறைச்சாத்தியமான வழிமுறையினையோ நாம் கைவிட்டிருக்கவில்லை. இன்று விழுகின்ற சிறு மழைத்துளிகளுக்கு மட்டும் நாம் ஒதுங்கி விடுவோம் என்பது நடக்கப்போவதில்லை.

இதுவரை கால எமது உழைப்பும் எமது சிந்தனைகளும் நடைமுறைகளும் இன்று சகல தரப்பாலும் அங்கீகாரம் பெற்றிருக்கின்றது.

எமது இலக்கை எட்டிவிடும் அரசியல் சூழல் இன்று பிறந்திருக்கின்றது. அதற்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம். சாத்தியமாகாது என்றும் சரிப்பட்டு வராது என்றும் விலகி நிற்க வைக்கும் சோம்பல்களுக்கும் சுயலாபங்களுக்கும் சவாலாக நாம் நடக்க வேண்டிய அனைத்தையும் எமது இணக்க அரசியல் வழிமுறை மூலம் சாத்தியாக்கி காட்டுவோம்.

கௌரவ இத்தினசபாபதி அவர்களும் மறுபடியும் மரியாதை செலுத்தி அவரை நினைவு படுத்தி அவரது சிந்தனைகள் வெல்லப்படும் என்று கூறி இந்த உரையை நான் முடிக்கின்றேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’