கமநலச் சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ் மாவட்டத்தின் ஏர் பூட்டு விழா 2010ஃ2011 இன்றைய தினம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களினதும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அவர்களினதும் பங்குபற்றுதலுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கமநலச் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பெற்றிக் ரஞ்சன் அவர்களது ஏற்பாட்டிலும் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் பத்மநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதுவரையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாமலிருந்த நிலங்கள் தற்போது படிப்படியாக பயிர்ச்செய்கைக்காக விடப்படுவதாகவும் மேலும் தொடர்ந்து தான் முயற்சிகளை மேற்கொண்டு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாதிருக்கும் ஏனைய நிலங்களிலும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கு படிப்படியாக நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது யாழ் குடாநாட்டில் பயிர்ச்செய்கையை மிகவும் பரந்தளவில் மேற்கொண்டு பாரிய அபிவிருத்தியைக் காண வேண்டும் என்பதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும் தனதும் எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்தார்.
யாழ் கட்டளைத் தளபதி கருத்துத் தெரிவிக்கும் போது ஓர் அங்குல நிலத்தையேனும் வீணாக்காமல் அவற்றைப் பயன்படுத்த விவசாய மக்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இன்றைய நிகழ்வில் விவசாய மக்களுக்கான உழவு இயந்திரங்கள் நீர் இறைக்கும் இயந்திரங்கள் உரம் விதை நெல் ஆகியன பிரதம அதிதிகளால் வழங்கப்பட்டன.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஆளுநர் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களும் கட்டளைத் தளபதியும் நிலத்தை உழுது ஏர் பூட்டு விழாவை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’