வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 ஆகஸ்ட், 2010

வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று ஆதிகோவிலடிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம்

டமராட்சி வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர் சமாசத்தின் கோரிக்கையின் பேரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் அப்பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றுமுற்பகல் வல்வெட்டித்துறைப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கடற்றொழில் சமாசத் தலைவர் சுப்பிரமணியம் சேதுலிங்கம் தலைமையில் பெருமளவு கடற்றொழிலாளர்களும் அவர்தம் குடும்பங்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து வல்வெட்டித்துறை ஆதிகோவிலுக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளிலும் பங்குகொண்டார். அதனைத்தொடர்ந்து அப்பிரதேச கரையோரப் பகுதிகளை அமைச்சரவர்கள் பார்வையிட்டதைத் தொடர்ந்து ஆதிகோவிலடி மடத்து மண்டபத்தில் பொதுக்கூட்டமொன்று இடம்பெற்றது. இதில் தமது கோரிக்கைகள் தேவைகள் குறித்து கடற்றொழிலாளர்கள் விரிவாக எடுத்துக் கூறினார்கள். குறிப்பாக இந்திய கடற்றொழிலாளர்களின் ஊடுருவல் கடலரிப்பு அணை அமைத்தல் மற்றும் தமக்கான உதவித்திட்டங்களின் தேவை குறித்து எடுத்துக்கூறினார்கள்.

அக்கரையோரப்பிரதேசத்தை சுற்றிப்பார்வையிட்ட நிலையிலும் கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அக்கறை செலுத்திய நிலையிலும் அவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் குறித்து உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். குறிப்பாக இந்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் கடற்படை அதிகாரிகள் ஆகியோருடன் கடற்றொழில் சமாசப் பிரதிநிதிகள் அடங்கிய அனைத்து தரப்பினருடனும் கூட்டுப் பேச்சுவாத்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வொன்றினைக் காணமுடியும் என்பதுடன் விரைவிலேயே அதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கடலரிப்பிற்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட தரப்பினரின் உதவி மற்றும் பிரதேச மக்களின் பங்களிப்புடன் நிச்சயமாக தீர்வினைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார். கடல்வான் ஆழமாக்கும் பணிகள் திருப்திகரமாக இடம்பெற்றமைக்கு கடற்றொழிலாளர்களின் சார்பில் சமாசத் தலைவர் நன்றி தெரிவித்த போது அதற்கு பதிலளித்த அமைச்சரவர்கள் இது முற்றுமுழுதாக தமது நிதியுதவியுடனேயே மேற்கொள்ளப்பட்டது என்பதை தெரிவித்ததுடன் அரசாங்கத்தின் உதவிகள் எவையும் இதில் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இச்சந்திப்பின்போது பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு.வரதீஸ்வரன் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தர்மலிங்கம் கடற்றொழில் சமாசத் தலைவர் எமிலியாம்பிள்ளை வடமராட்சி ஈபிடிபி அமைப்பாளர் ஐ.ரங்கேஸ்வரன் உட்பட கடற்றொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் பெருமளவில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’