வடமராட்சி கடற்றொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான கடல்வான் ஆழமாக்கும் பணிகள் மேற்கொள்ப்படுவதை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கடற்றொழில் சமூகத்தினர் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கடல்வான் ஆழமாக்கும் மேற்படி விடயம் தொடர்பாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் நேரடியாகவும் அமைச்சரவர்கள் வடமராட்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பங்களிலும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். கடந்தமாதம் வடமராட்சி வடக்கைச் சேர்ந்த பதினாறு கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளின் சார்பில் அமைச்சர் அவர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய வான் ஆழமாக்கல் புனரமைப்பு பணிகளுக்கென ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாவினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முதற்கட்டமாக மகேஸ்வரி நிதியத்தினூடாக வழங்கியிருந்தார்.
வழங்கப்பட்ட மேற்படி நிதி மூலம் தொண்டமனாறு முதல் கற்கோவளம் வரையான கடலில் வான் ஆழமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்தமாதம் இருபதாம் திகதி தொண்டமனாறு பெரிய கடற்கரைப் பிரதேசத்திற்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெக்கோ இயந்திரத்தை தானே இயக்கி வான் ஆழமாக்கும் பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தார். இந்நிலையில் மேற்படி பணிகள் அப்பிரதேசத்தில் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இன்றையதினம் அங்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை ஆரவாரமாக வரவேற்ற கடற்றொழில் சமூகத்தினர் தமது நன்றிகளை அவருக்கு தெரிவித்துக்கொண்டார்கள்.
இச்சமயம் பருத்தித்துறை பிரதேச செயலாளர் தி.வரதீஸ்வரன் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தர்மலிங்கம் வடமராட்சி கடற்றொழில் சமாசத் தலைவர் எமிலியாம்பிள்ளை வடமராட்சி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அமைப்பாளர் ஐ.ரங்கேஸ்வரன் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி அதுல அமரசிங்க ஆகியோருடன் பெருமளவு கடற்றொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் அங்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’