தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் குமரன் பத்மநாதன், சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜுக்கு வழங்கிய செவ்வியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழக சட்டமன்ற உறுப்பினர் கே.மகேந்திரன் தொடர்பாக கே.பி. தெரிவித்த தகவலை கே.மகேந்திரன் மறுத்துள்ளார்
.'டெய்லி மிரர்' ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த அச்செவ்வியை 'தமிழ் மிரர்' இணையத்தளம் மொழிபெயர்த்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் கொண்டு வரும் திட்டம் குறித்து புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர் கே.மகேந்திரனிடம் தெரிவித்ததாகவும் அதை வைகோவிடம் மகேந்திரன் தெரிவித்ததாகவும் கே.பி. கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு தமிழக சட்டமன்ற உறுப்பினர் கே.மகேந்திரன் அனுப்பியுள்ள கடிதமொன்றில் மேற்படி தகவல்களை மறுத்துள்ளார்.
தனக்கோ தனது கட்சிக்கோ விடுதலைப் புலிகளுடனோ நடேசனுடனோ எவ்வித தொடர்பும் இருந்ததில்லை எனவும் போர் நிறுத்தம் குறித்து நடேசன் தன்னுடன் பேசியதாக குமரன் பத்மநாதன் அளித்துள்ள பேட்டியில் கூறப்படுவது உண்மை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
“இலங்கைத் தமிழர்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளானபோது இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலையைத்தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி அளிக்கப்பட வேண்டும் என எமது கட்சி வலியுறுத்துகிறது” எனவும் அவர் அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’