அரசியலமைப்பு கற்கை நிறுவனமானது மாகாணசபை அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான தேசிய அமைப்புடன் இணைந்து பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான செயலமர்வினை இன்றைய தினம் (21) யாழ்ப்பாணத்தில் நடாத்தியது (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன).
. நாடெங்கும் மேற்படி செயலமர்வானது மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்டுவரும் நிலையில் வடமாகாணத்திற்கான செயலமர்வே இன்றையதினம் யாழ். திருமறைக்கலாமன்ற திருத்தூது மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விசேட பிரதிநிதிகளாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் எம்.சந்திரகுமார் பத்மநாபா ஈபிஆர்எல்எப் அமைப்பின் செயலாளர் நாயகம் தி.சிறிதரன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.முஸ்தபா ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண பேராசிரியர்களான ஏ.எம்.நவரட்ண பண்டார ரஞ்சித் அமரசிங்க அசோக்க எஸ் குணவர்த்தன ஆகியோரும் பங்குகொண்டனர்.
விசேட அதிதிகள் அனைவராலும் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்ட மேற்படி நிகழ்வில் விசேட உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கான நடைமுறைச் சாத்தியமான ஓர் ஆரம்பப்புள்ளியே பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் தவிர அதுதான் தீர்வல்ல எனத்தெரிவித்தார். மேலும் இதனை நாம் ஆரம்பம் முதலே தெரிவித்துவரும் நிலையில் இன்றையதினம் எமது பிரதேசத்தில் இவ்விடயம் தொடர்பான செயலமர்வினை நடாத்துவது தொடர்பில் ஏற்பாட்டாளர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனக்குறிப்பிட்டார்.
இன்றைய செயலமர்வில் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு என்ற தலைப்பில் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ணவும் அதிகார கையளிப்பிற்கு பிரவேசிக்கும்போது ஏற்படக்கூடிய அரசாங்க நிதி விடயங்கள் எண்ணக்கருக்கள் தடைகள் மற்றும் சவால்கள் என்ற தொனிப்பொருளில் அசோக்க எஸ் குணவர்த்தன அவர்களும் மாகாண சபைகளின் காணி மற்றும் அபிவிருத்திச் சிக்கல்களும் சவால்களும் என்ற தலைப்பில் பேராசிரியர் ரஞ்சித் அமரசிங்க அவர்களும் மாகாண சபை - அரச நிர்வாகம் என்ற விடயதானத்தில் பேராதனை அரசறிவியல் துறை பேராசிரியர் ஏ.எம்.நவரட்ண பண்டார அவர்களும் விரிவான சொற்பொழிவாற்றினார்கள்.
இன்றைய செயலமர்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பெருந்தொகையானோர் பங்குகொண்டதுடன் தமது அபிப்பிராயங்களையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’