இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இருவர் நேற்றுக் குடாநாட்டுக்குத் திடீர் விஜயம் செய்திருந்தனர். யாழ்ப்பாணத்தின் இப்போதைய பாதுகாப்பு நிலையை நேரில் கண்டறியும் பொருட்டே இங்கு அவர்கள் வந்தனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நேற்றுக் காலை விஜயம் செய்து பொதுமக்களுடன் உரையாடி இப்போதுள்ள பாதுகாப்பு நிலைவரத்தைக் கேட்டறிந்தனர். போருக்குப் பின்னரான பாதுகாப்பு நிலைமை குறித்த தகவல்களை மிக விவரமாகத் தாம் சந்தித்த பொதுமக்களிடம் இருந்து அறிந்து சென்றுள்ளனர். யாழ்.குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இருவர் திடீர் விஜயம் ஒன்றை நேற்று மேற்கொண்டனர்.
இந்தியத் தூதரக இரண்டாம் நிலைச் செயலர் கே.முரளிதரன், கவுன்சலர் ஏ.சுனில் ஆச்சயா ஆகிய இருவரும் நேற்றுக்காலை குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து, நிலைமைகளைப் பார்வையிட்டனர்.
அதன்போது பொது மக்கள் பலரையும் நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கை நிலை, தேவைகள், போருக்கு பின்னரான யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைவரம் என்பன தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் இருவரும் விவரமாகக் கேட்டறிந்தனர்.
போர் முடிவடைந்த பின்னர் அச்ச சூழ்நிலை பெருமளவுக்கு நீங்கி இருப்பதாகவும் முன்னரைக் காட்டிலும் பல்வேறு வகைகளில் தமது வாழ்க்கைத்தரம் உயரத் தொடங்கி உள்ளதாகவும், குடாநாட்டின் பொருளாதார நிலையை உயர்த்த அபிவிருத்தித் திட்டங்கள் தேவைப்படுவதாகவும் மக்கள் அவர்களிடம் தெரிவித்தனர் என்று அறியவந்துதது.
பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக ஆராயும் பொருட்டு வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட அரச அதிபர், பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோரையும் இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், மக்கள் வாழ்க்கை மேம்பாட்டு அபிவிருத்தி, மீள்குடியமர்வு என்பன தொடர்பான நடவடிக்கைகள் தமக்குப் பூரண திருப்தியை அளிப்பதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் குடாநாட்டின் உயர் அதிகாரிகள் பலரிடம் கூறியதாகத் தெரியவந்தது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’