அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேவையான நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது
.ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர் கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் இந்த முடிவு குறித்து ஊடகச் செய்திகள் மூலமே தாம் அறிந்து கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பிபிசியிடம் குறிப்பிட்டார்.
இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய பிரதமர் தலைமையிலான மந்திரிசபை முறையை கொண்டுவருவதே தமது கட்சியின் நிலைப்பாடாக உள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸும் ஆரம்பத்திலிருந்து இந்த நிலைப்பாட்டிலேயே இருந்ததாகவும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
தேர்தல் மேடையில் எதிரணி தலைவர்கள்
இந்த விடயம் குறித்து அடுத்த வாரத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, ‘குடும்ப நல’ அரசியலமைப்புத் திருத்தத்திற்குப் பதிலாக மக்கள் நல அரசியலமைப்புத் திருத்தத்தையே வலியுறுத்துவதாக கூறியுள்ளது.
அரசாங்கம் எவ்வாறான திருத்தங்களை அரசியலமைப்பில் மேற்கொள்ள தற்போது உத்தேசித்துள்ளது என்பது பற்றி உத்தியோகபூர்வமாக எந்த அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.
தமக்கேற்றவாறு அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு கிடைக்காது என்ற பட்சத்திலேயே அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸை தம்முடன் இணைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
‘யார் அரசாங்கத்துடன் இணைந்தாலும் எமது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது’ எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பிபிசியிடம் கூறினார்.
இரண்டு வாரத்தில் புதிய திருத்தங்கள்
அமைச்சர் டினேஷ் குணவர்தன
இதேவேளை, அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என இலங்கையின் சிரேஷ்ட அமைச்சர் டினேஷ் குணவர்தன பிபிசியிடம் தெரிவித்தார்.
முதற்கட்டமாக இந்த வாரத்தில், புதிய திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவை ஆராய்ந்து அவற்றை ஜனாதிபதியிடம் அனுப்பிய பின்னர், அவற்றை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைகளுக்காக ஜனாதிபதி அனுப்பி வைப்பார் எனவும் அமைச்சர் டினேஷ் குணவர்தன கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’