வீ டுகளில் பயன்படுத்தப்படும் கணினிகளில் சிறார்கள் நீலப்படங்களை பார்ப்பதைத் தடுப்பதற்காக, இணையத்தள வடிகட்டல் முறைமையொன்றை இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
'இணையத்தள சேவை வழங்குநர்கள் மூலமா அல்லது வீடுகளிலா இந்த வடிகட்டல் முறைமையை அமுல்படுத்துவது என்பது குறித்து நாம் விரைவில் தீர்மானிப்போம். எனினும் பெற்றோர்கள் மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்தினால் அதை இலகுவாகச் செய்ய முடியும்.
இணையத் தளங்களை கண்காணித்து வடிகட்டும் பொறுப்பு சேவை வழங்குநர்களுக்கு ஒப்படைக்கப்பட்டால் அது அவர்களுக்குப் பெரிய இலக்காக இருக்கும். அதேவேளை, இந்நடவடிக்கை காரணமாக இணையத்தின் வேகம் பாதிக்கப்படவும் கூடாது' என அவர் தெரிவித்தார்.
இந்த வடிகட்டல் நடவடிக்கை கணினிகளுக்கு மாத்திரமல்லாமல், செல்லிடத் தொலைபேசிகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் கூறினார்.
இவ்விடயம் குறித்து பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு, நீதிச்சேவை, பொலிஸ் ஆகியனவற்றுடன் தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பல தடவைகள் கலந்துரையாடியுள்ளது.
'எமது பிரதான நோக்கம் பாலியல் படங்களை சிறார்கள் பார்வையிடுவதைத் தடுப்பதுதான். சிறார்கள் அவற்றை பார்ப்பதை கண்காணித்து தடுப்பதற்கு ஏற்ற மிகச் சிறந்த நபர்கள் பெற்றோர்களே. அவர்கள் கணினிகளிலும் செல்லிடத் தொலைபேசிகளிலும் மென்பொருள் ஒன்றை பயன்படுத்துவதன் மூலம் அதை இலகுவாகச் செய்யலாம். சிறார்களைக் கொண்ட வீடுகள் ஒவ்வொன்றிலும் இத்தகைய வடிகட்டல் மென்பொருள் ஒன்றை பயன்படுத்துவது குறித்து ஆராய்கிறோம்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்" என அவர் கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’