கடந்தகால தவறுகள் மற்றும் இன நெருக்கடிக்கு காரணமாகவிருந்த மோசமான ஆட்சி முறைகள் தொடர்பில் நாட்டின் ஆளும் கட்சி எதிர்க்கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் பொதுவான பொறுப்பு என்ற அடிப்படையில் நாட்டு மக்களிடம் ஒருமித்த மன் னிப்புக் கோரவேண்டும். இவ்வாறு மன்னிப்பு கோரவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. காரணம் மோசமான ஆட்சி முறைக்கு அனைத்து கட்சிகளும் பொறுப்புக் கூறவேண்டுபும். வெறுமனே ஒரு சமூகத்தை குறைகூற முடியாது. இதனை சர்வகட்சி குழுவின் ஊடாகவோ அல்லது வேறு வழிகளிலோ செய்ய முடியும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன் என முன்னாள் அரச சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி ஜயந்த தனபால தெரிவித்தார்.
சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றுக்கு அரசாங்கம் விரைவில் செல்லவேண்டும். இதன்மூலம் புலம்பெயர் மக்களை இணைத்துக்கொண்டு எமது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். அத்துடன் குறுகிய காலத்தில் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு செல்வது மிகவும் முக்கியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே ஜயந்த தனபால மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் 2. மணியவில் நேற்றைய அமர்வு ஆரம்பமாகியது.
அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த ஜயந்த தனபால கூறியதாவது:
இந்த தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவானது ஒரு வருடம் தாமதித்து நியமிக்கப்பட்டுள்ளது என்று முதலில் கூறுகின்றேன். நாம் கடந்தகாலங்களில் இருந்து அதிகளவில் படிப்பினைகளை பெறக்கூடியதாகவுள்ளது.
நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய பயங்கரவாத பிரச்சினைக்கு புலிகளின் செயற்பாடுகள் மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாது. மாறாக கடந்தகாலங்களில் கொண்டுநடத்தப்பட்ட தவறான ஆட்சி முறைகளும் ஒரு காரணமாகும். தவறான ஆட்சி முறைமைகள் குழுக்கள் ஆயுதங்களை எடுப்பதற்கு காரணமாகியது.
தற்போதைய நிலைமையில் நாட்டில் அரசியலமைப்பு திருத்தங்கள் விரைவாக முன்வைக்கப்படவேண்டும். அதாவது வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்களை கருத்திற்கொண்டு இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். அதற்கு உயர்ந்த முக்கியத்துவத்தை நாம் வழங்கவேண்டியுள்ளது. அந்த தேவை தற்போது அவசரமாகவுள்ளது. உங்கள் ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அதனை உடனடியாக முன்வைக்கவேண்டும். அதாவது அரசியலமைப்பு திருத்தங்கள் மக்களின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக அமையவேண்டும். ஒருவேளை உணவு தேவையாக இருந்தாலும் சிறுவர் கல்வியாக இருந்தாலும் முரண்பாடாக இருந்தாலும் அவற்றுக்கானன தீர்வுகள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவேண்டும். அரசியலமைப்பு அனைத்து விடயங்களையும் உறுதிபடுத்தவேண்டும்.
மேலும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை மக்கள் முன் வெளியிடப்படவேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு வெளியிடப்படும் பட்சத்தில் அதனை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். எனவே அது தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும்.
எந்தவொரு மக்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் கல்வி செயற்பாடுகள் அமையவேண்டும். நாட்டின் கல்வி திட்டம் தொடர்பில் நாம் பாரிய வகையில் ஆராயவேண்டியுள்ளது. கடந்தகால பிரச்சினைகளுக்கு பல காரணங்களை முன்வைக்கலாம். ஆனால் சிறப்பான எண்ணக்கருக்கள் ஏற்படும் வகையில் கல்வி முறைமை அமையவேண்டும் என்பது முக்கியமாகும். மேலும் அனைத்து மொழிகளையும் அனைவரும் கற்கும் வகையில் கல்வி முறைமை அமையவேண்டும். இது தொடர்பில் என்னால் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க முடியும். இதற்கு முன்னரே இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்கவேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில் பல நாடுகள் பல்வேறு மொழிகளை கொண்டுள்ளதை நாம் காண்கின்றோம். அவற்றை நாம் உதாரணமாக எடுக்க முடியும். புலமைப் பரிசில் கிடைக்குமிடத்து வெளிநாட்டு மொழிகளை கற்கின்றனர். எனவே அனைவரும் அனைத்து மொழிகளையும் கற்கவேண்டும். இது தொடர்பில் கற்பித்தலும் சிறப்பாக அமையவேண்டும்.
அடுத்ததாக புலம் பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் நாம் ஆராயவேண்டியுள்ளது. முக்கியமாக பல்வேறு காரணங்களினால் மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கும் அபிலாஷைகள் உள்ளன. அதாவது அநீதிகள் முரண்பாடுகள் பொருளாதார காரணங்கள் என்பவற்றினால் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அந்தக் காரணங்களை நாம் மதிக்கவேண்டும். எனவே அவர்களுடன் சிறப்பாக செயற்படுவது தொடர்பில் ஆராயவேண்டும்.
புலம்பெயர்ந்தவர்களின் கணிப்பீடு தேவை
மேலும் சரியான மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கும் பட்சத்தில் புலம் பெயர் மக்களுடன் சிறப்பான முறையில் இணைந்து செயற்படலாம் என்று நம்புகின்றேன். அவர்களை இந்த நாட்டின் அபிவிருத்தியில் இணைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தூண்ட முடியும். இல்லாவிடின் தவறான புரிந்துகொள்ளல்கள் இடம்பெறலாம். மேலும் சர்வதேச ரீதியில் இலங்கை புலம் பெயர் மக்களின் எண்ணிக்கை தொடர்பில் கணிப்பீடு ஒன்று செய்யப்படவேண்டும். இது தொடர்பில் தூதுவர்கள் சிறப்பாக செயற்படவேண்டும். இந்தியா அமெரிக்காவில் தனது நாட்டு மக்கள் தொடர்பில் இவ்வாறு வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு அதிகளவில் நிதி தேவைப்படும்.
அடுத்த விடயமாக எமது நாட்டின் இராஜதந்திர சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சுக்கு பல பொறுப்புகள் உள்ளன. வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகள் அனைத்து மொழிகளிலும் இடம்பெறவேண்டும். அனைத்து மொழி பேசுபவர்களும் இந்த சேவையில் உள்ளடக்கப்படவேண்டும். எமது நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு இராஜதந்திர சேவை ஊடாக தெளிவுபடுத்தவேண்டும். இராஜதந்திர ரீதியிலான பேச்சுக்களில் ஈடுபடவேண்டும். இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தவேண்டும். ஏற்கனவே அரசாங்கத்தினால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அதாவது சர்வதேசத்துக்கு சிறந்த முறையில் விளக்கமளிப்புகள் வழங்கப்படவேண்டும். வடக்கு கிழக்கு அபிவிருத்தி அரசியல் தீர்வு விடயங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேசத்துக்கு அறிவிக்கவேண்டும்.
மனித உரிமை விடயம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சர்வதேசத்துடன் நாம் செயற்படுகையில் மனித உரிமை விடயம் என்பது மிகவும் முக்கியமாகும். அதாவது சர்வதேச ரீதியில் பல உடன்படிக்கைகளில் நாங்கள் கைச்சாத்திட்டுள்ளோம். இது தொடர்பில் சர்வதேசத்தின் உரிமையை நாம் மதிக்கவேண்டும். மேலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஆராயவேண்டும்.
அடுத்த விடயமாக சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் குறித்து நாம் ஆராய்கின்றோம். அதாவது கடந்தகாலங்களில் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பை தோற்கடித்துள்ளோம். இந்நிலையில் சிவிலியன்களின் பாதுகாப்பு குறித்தே சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் கூறுகின்றன. இந்த சட்டங்களின் நோக்கம் இதுவாகும். பயங்கரவாத அமைப்பானது சிறுவர் போராளிகளை இணைத்துக்கொள்ளும் சிவிலியன்களை மனித கேடயமாக பயன்படுத்தும். சொத்துக்களை அழிக்கும் உயிர்களை அழிக்கும். அவ்வாறான ஒரு அமைப்பை அரசாங்கம் ஒன்றின் இராணுவம் எவ்வாறு தோற்கடிக்கவேண்டும் என்று சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் கூறுகின்றன.
மனிதாபிமான சட்டங்களில் மீளாய்வு தேவை
இந்நிலையில் இவ்வாறான நிலைகளில் அரசாங்க இராணுவம் எவ்வõறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் மீள ஆராயவேண்டியுள்ளது. அதாவது எமது நாட்டில் சட்டத்துறையில் தேர்ச்சி பெற்றோர் உள்ளனர். அவர்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து சில யோசனைகளை தயாரித்து முன்வைக்கலாம். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் எமது இராணுவத்தினர் சுமார் மூன்று இலட்சம் மக்களை மீட்டெடுத்தனர். அதாவது மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட மக்களை இராணுவத்தினர் காப்பாற்றினர். இராணுவத்தினர் பல்வேறு தியாகங்களை செய்தே இந்த பணியை மேற்கொண்டனர். இதனை சர்வதேசத்துக்கு காட்டியிருக்கவேண்டும். அதன்போது சர்வதேச அபிப்பிராயத்தை சிறந்ததாக கொண்டுவந்திருக்கலாம். எமது இராணுவத்தினர் சிவிலியன் இழப்புக்களை குறைத்தனர். இந்நிலையில் கிளர்ச்சிக் குழுக்களுடன் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் புதிய கட்டமைப்பை ஒன்றை உருவாக்கவேண்டும். எனவே சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பில் நாம் ஆராயவேண்டும். எவ்வாறெனினும் சிவிலின்களை பாதுகாப்பது எமது கடமையாகும்.
சிவிலியன்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அப்படிப் பார்க்கும்போது தற்போது எமக்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் தனித்துவ சந்தர்ப்பம் ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளோம். அதாவது ஆயுதமற்ற சமூகத்தை நாம் உருவாக்கவேண்டும். புலிகளின் கிளர்ச்சி மற்றும் 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி எமக்கு அனுபவங்களை தந்துள்ளன.
இந்நிலையில் சகல குழுக்களிடமிருந்தும் ஆயுதங்கள் அகற்றப்படவேண்டும். அதாவது சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை வைத்திருக்கலாம். மாறாக ஏனையவர்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்படவேண்டும். யுத்த காலத்தில் பல இராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தப்பிச் சென்றுள்ளனர். அந்த ஆயுதங்கள் தொடர்பில் ஆராயவேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போதைக்கு முற்றுப்புள்ளி என்று ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார். எனவே தற்போதைய நிலைமையில் ஆயுதங்களுக்கு முற்றுப்புள்ளி என்று ஒரு வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவேண்டும். அது எமது சர்வதேச கடமையாகவுள்ளது. எனவே அதற்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் தேசிய பிரசாரம் செய்யப்படவேண்டும். இன மற்றும் மத சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டு அதன் மூலம் நிறுவனம் ஒன்று அமைக்கப்படவேண்டும். அதனூடாக இனம் மதம் ஆகியவற்றின் உரிமைகள் உறுதிபடுத்தப்படவேண்டும். யாருக்கும் அநீதிகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகும்.
அடுத்த விடயமாக உடனடியாக நாட்டில் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் இடம்பெறவேண்டும். பாதுகாப்பு படைகளில் அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்கள் இடம்பெறவேண்டும். ஏற்கனவே பொலிஸ் துறையில் இவ்வாறு இடம்பெறுகின்றது என்பதனை அறிவேன். ஆனால் பாதுகாப்பு படைகளிலும் இந்த விடயம் கொண்டுவரப்படவேண்டும்.
மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிகழ்வுகளில் தமிழில் பேசுவது சிறப்பான விடயமாகும். இது ஏனைய மொழிகளை மதிப்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கின்றது.“ இதனை ஏனைய அமைச்சர்கள் பின்பற்றவேண்டும். அரசியல்வாதிளும் பின்பற்றவேண்டும். கடந்தகால தவறுகள் மற்றும் இனப் நெருக்கடிக்கு காரணமாகவிருந்த ஆட்சி முறைகள் தொடர்பில் நாட்டின் ஆளும் கட்சி எதிர்க்கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் பொதுவான பொறுப்பு என்ற அடிப்படையில் ஒருமித்த மன்னிப்புக் கோரவேண்டும். இவ்வாறு மன்னிப்பு கோரவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. வெறுமனே ஒரு சமூகத்தை குறைகூற முடியாது. இதனை சர்வகட்சி குழுவின் ஊடாகவோ அல்லது வேறு வழிகளிலோ செய்ய முடியும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன். கடந்த கால தவறுகளுக்கு ஆட்சி முறைமைகளே காரணமாகும்.
இங்கு ஒரு விடயத்தை முன்வைக்கின்றேன். அதாவது 1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் நடைபெற்றதும் அப்போதைய பேராயராக இருந்த லக்ஷ்மன் விஜேசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதாவது சிங்கள மக்கள் சார்பாக தான் மனிப்புக் கோருவதாக அவர் அதில் தெரிவித்திருந்தார். அவ்வாறான விடயம் இங்கு அவசியம் என்று நான் கருதுகின்றேன்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’