தென்மராட்சி கொடிகாமம் அல்லாரையிலுள்ள மாதிரி தாவரப்பண்ணையில் பயன்தரு மரங்களை பாரியளவில் உற்பத்தி செய்வதற்காக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் நிதியுதவி வழங்கியுள்ளார்.
ஏற்கனவே அமைச்சரவர்கள் அப்பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு உற்பத்தியாகும் புதியவகை தாவர இனங்களை நேரடியாகப் பார்வையிட்டிருந்தார். குறிப்பாக ஆறு மாதத்தில் காய்க்கும் கறிமுருங்கை குறுகிய காலத்தில் அதிக நிறையில் விளைச்சல் தரும் யானைக்கொய்யா ஆகிய பயிரினங்கள் உள்ளிட்ட நாற்றுக்கள் பெருமளவில் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. போதிய உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் பாரிய அளவில் மேற்படி மரக்கன்றுகளை உற்பத்திசெய்து வழங்க முடியுமென மாதிரிப்பண்ணை நிர்வாகிகளினால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மகேஸ்வரி நிதியத்தினூடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முதற்கட்டமாக மூன்று இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 15 ம் திகதி அங்கு நேரடியாகச் சென்று மரக்கன்றுகளின் உற்பத்திகள் குறித்து பார்வையிட்ட அமைச்சரவர்கள் மாவட்டத்தில் மரவளர்ப்பினை ஊக்குவிக்கும் முகமாக பரவலாக அக்கன்றுகள் பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்தார். இயற்கை மற்றும் யுத்த சூழ்நிலையால் அழிந்துபோன மரங்களுக்கான பதிலீட்டு நடவடிக்கை என்பது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இம்மரக்கன்றுகளின் நடுகை அமையவேண்டும் என்பதையும் தெரியப்படுத்தினார். யானைக்கொய்யா கறிமுருங்கை எலுமிச்சை பலா பப்பாளி மாங்கன்று போன்ற பயன்தரு மரக் கன்றுகளுடன் நிழல் தரும் மரக்கன்றுகளும் அங்கு பாரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றையதினம் (23) யாழ்ப்பாணத்திலுள்ள தமது பணிமனைக்கு வருகை தந்திருந்த அல்லாரையிலுள்ள மாதிரி தாவரப்பண்ணை நிர்வாகி த.குகநேசன் அவர்களிடம் மகேஸ்வரி நிதியம் ஊடாக ஒருலட்சத்து எண்பத்தையாயிரம் ரூபாவிற்கான காசோலையினைக் கையளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாரி காலம் ஆரம்பமாவதற்கு முன்பதாக நடுகை மேற்கொள்ளும் முகமாக மரக்கன்றுகளின் உற்பத்தியை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’