மொழி,பாதுகாப்பு விடயங்களில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குப் பாரபட்சம் இழைக்கப்பட்டிருப்பதாக டாக்டர் கொட்பிரே குணதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேசத் தொடர்புகள் மற்றும் தந்திரோபாய உறவுகள் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போது அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே எமரிற்றீஸ் மார்கன்ஸ் அமையத்தின் தலைவரான டாக்டர் கொட்பிரே குணதிலக இவ்வாறு தெரிவித்தார்
.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இரண்டாவது நாள் அமர்வில் ஆணைக்குழுவின் முன் டாக்டர் கொட்பிரே தொடர்ந்து தெரிவிக்கையில்;
யுத்த நிறுத்த உடன்படிக்கையானது அது கைச்சாத்திடப்பட்ட ஆரம்ப நாட்களிலிருந்தே கடுமையாக மீறப்பட்டுள்ளது.
ஜனநாயக உரிமையையும் அமைதியையும் வடக்கு,கிழக்கில் மீள் நிலைநாட்டுவதன் மூலம் தான் இயல்பு நிலைமையைக் கொண்டுவரமுடியும். ஆனால் இயல்பு நிலைமையை மீள் நிலைநாட்டுவது தோல்வி கண்டுள்ள நிலையில் யுத்த நிறுத்த உடன்படிக்கையானது அதன் மீதே கவனம் செலுத்தியது.
அத்துடன், எவ்வாறான பேச்சுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
அக்காலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவை அவசியமாகவும் இருந்தன. ஆனால் அதற்குப் பல்வேறு காரணங்களும் இருந்தன.
சமாதானத்துக்குத் தேவையான சகல வழிகளிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதனை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதே அரசின் முக்கிய தேவையாக இருந்தது.
அத்துடன் ஆணைக்குழுவின் வீழ்ச்சி, கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீதான தாக்குதல் அதன் பின்னரான பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றின் பின்னர் இலங்கைக்கு ஓய்வொன்று தேவைப்பட்டது.
இவ்வாறான சூழ்நிலைகளில் யுத்த நிறுத்த உடன்படிக்கையினால் பல சாதகமான விளைவுகளும் ஏற்பட்டதென என்னால் கூறமுடியும்.
மேலும் அரசியல் தீர்விற்கு இரு தரப்பினருமே இரண்டாம் இடத்தினையே வழங்கியிருந்தனர்.
சமாதானப் பேச்சுகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டமையானது அவர்களின் கோரிக்கையான தனிநாட்டுக்கும் குறைவான நிலைப்பாட்டுக்குள் அவர்களை உள்வாங்கியது.
அத்துடன் அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு இருதரப்பும் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கவில்லை.
அதேவேளை, மோதலின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்கள் பணயக்கைதிகளாக்கப்பட்டிருந்ததன் மூலம் புலிகள் சர்வதேசத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனாலும் இவ்விடயம் குறித்து சர்வதேச அழுத்தம் தொடர்ச்சியாக இருந்து வந்தது. அரசியல் தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்வதற்குப் பொருளாதார ஸ்திரத்தன்மை அவசியமானதாகும்.
அதேவேளை, மோதலின் இறுதிக் கட்டத்தை எடுத்துக் கொண்டால் பொதுமக்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டபோது சர்வதேச சமூகம் வலுவான அறிக்கைகளை வெளியிடாததுடன், உரிய அழுத்தங்களையும் வழங்கவில்லை.
அத்துடன் மொழி, பாதுகாப்பு என்ற ரீதியில் சிறுபான்மைத் தமிழ் மக்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டுள்ளனரெனவும் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’