வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஜூலை, 2010

சர்வகட்சி குழுவின் இறுதி அறிக்கை இன்று பகிரங்கமாக்கப்பட்டது


இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் ஆகியோர் இன்று கொழும்பில் வெளியிட்டனர்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அமைக்கப்பட்ட சர்வகட்சி  பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அவ்வறிக்கை பகிரங்கப் படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அக்குழுவில் இ.தொ.காவை பிரதிநிதித்துவப்படுத்திய தற்போதைய ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன்,  ஸ்ரீல.மு.காவை பிரதிநிதித்துவப்படுத்திய அக்கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் நிஷாம் காரியப்பர் ஆகியோர் தமது சுயமுயற்சியாக தொகுத்த அக்குழுவின் இறுதி அறிக்கையை இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் வெளியிட்டனர். ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகாண சபை உறுப்பினர் என். குமரகுருபரனும் இம்மாநாட்டில் பங்குபற்றினார்.


"தற்போது அரசியலைமைப்புத் திருத்தம் குறித்து பேசப்படுகிறது. இந்நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட சர்வகட்சி  பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறோம். இது ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகுக்குமென நம்புகிறோம்" என ஆர். யோகராஜனும் நிசாம் காரியப்பரும் தெரிவித்தனர்.
இவ்வறிக்கை தமது சொந்த அறிக்கை அல்ல, எனவும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையே இதுவெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
 "சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையின் ஒரேயொரு பிரதி மாத்திரமே தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சர்வகட்சி பிரதிநிதிகளாகிய நாங்கள், அக்குழுவில் அங்கம் விகிக்காத பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் தமிழத்தேசியக் கூட்டமைப்புடனும் ஜனாதிபதி பேச்சு நடத்தி, அதன்பின் ஒரு புதிய அரசியல் யாப்புக்கான முன்மொழிவை எடுத்துரைப்பார் என எதிர்பார்த்தோம்.
எனினும் இறுதி அறிக்கையொன்று  குழுவின் தலைவரினால் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என ஊடகங்கள் மூலம் அறியக்கிடைத்தாலும் ஐ.தே.கவுக்கோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அதன் பிரதி கிடைக்கவில்லை.  அக்குழுவில் பங்குபற்றிய பிரதிநிதிகளிடம்கூட அவ்வறிக்கையின் பிரதி இல்லை.
இவ்வாறான சூழலில் இறுதிக்கலந்துரையாடல்களின் ஆவண நகல்களை அடிப்படையாக வைத்து சகல விபரங்களையும் உள்ளடக்கிய இறுதி அறிக்கையை நாம் தயாரிக்க முடிவு செய்தோம்
சர்வகட்சி பிரதிநிதிகள் குழு 128 தடவை கூடி கலந்துரையாடியது. அக்கலந்துரையாடல் விபரங்கள் அனைத்தும்  நாடாளுமன்ற ஹன்சார்ட் பதிவாளர்கள் வரவழைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
இவ்வறிக்கையில் ஓரிரு சொல் வித்தியாசங்கள் இருக்க வாய்ப்புள்ள போதிலும், இது சர்வக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையை 99.99 சதவீதம் ஒத்தது.
 சர்வகட்சி குழுவின் இறுதித் தீர்மானங்களைக்கொண்ட இறுதி அறிக்கை இதுவல்ல என எவரேனும் ஆட்சேபித்தால் நாம் அச்சவாலை ஏற்றுக்கொண்டு ஆதாரங்களுடன் உண்மையை நிரூபிக்க எம்மால் முடியும்" என அவர்கள் தெரிவித்தனர்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் 14 கட்சிகள் பங்குபற்றிய போதிலும் ஏனைய கட்சிகள் அரசாங்கத் தரப்பில் உள்ளதால் இவ்வறிக்கையை வெளியிடும் முயற்சிக்கு அவற்றை அழைக்கவில்லை என யோகராஜனும் நிஷாம் காரியப்பரும் கூறினர்.
இவ்வறிக்கையை வெளியிடுவது குறித்து சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுடன் தாம் கலந்துரையாடவில்லை எனவும், ஆனால் இவ்வறிக்கை வெளியாகுவது குறித்து அவர் மகிழ்ச்சியடையக்கூடும் என தாம் கருதுவதாகவும்  அவர்கள் தெரிவித்தனர்.
இம்முயற்சிக்கு தார்மீக ஆதரவை வெளிப்படுத்தும் முகமாக செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் என். குமரகுருபரனுக்கும் அக்கட்சியின் தலைவர் மனோ கணேசனுக்கும் நன்றி தெரிவிப்பதாக நிஷாம் காரியப்பரும் ஆர். யோகராஜனும்  கூறினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’