மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் பொறுப்புக்களை ஏற்று நடைமுறைப்படுத்துவதன் மூலம் வன்னியில் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கான உதவிகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்க முடியும்.
இருப்பினும், அப்பிரதேசங்களிலுள்ள கள நிலைமைகளை அவதானித்து விமர்சனங்களில் ஈடுபடுவதான நடவடிக்கையினை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கும் என்று ஊடகத்துறை அமைச்சரும் தேசிய பாதுகாப்பு பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இந்நிலையில், வன்னிக்குச் செல்லும் எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் இடம்பெயர்ந்த மக்களைச் சென்று பார்த்து, அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யலாம் என்றும் அமைச்சர் கூறினார். மக்கள் மனதை மாற்றிவிடும் வகையில், ஏதாவது கூறிவிடலாம் என்பதற்காகவே, வடக்கிலுள்ள முகாம்களுக்கு இவர்களை செல்ல அனுமத்திப்பதில் முன்னர் சில கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் அமைச்சர் கெஹெலிய குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு உரையாற்றிய அமைச்சர், யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் 35ஆயிரத்து 333பேர் இன்னமும் முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 2 இலட்சத்து 67ஆயிரத்து 393 பொதுமக்களில், 2 இலட்சத்து 32ஆயிரத்து 60பேர் இந்த ஒரு வருட காலத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, இம்மக்கள் மீள்குடியேற விரும்பும் பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் கண்ணிவெடிகளை அகற்றும் இயந்திரங்களை கொள்வனவு செய்யவும், கண்ணிவெடி அகற்றவும் 860 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார். அத்துடன், ஆயிரத்து 744 சதுர கிலோமீற்றர் பரப்பளவு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடிகள் யாவும் தற்போது அகற்றப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.
இந்நிலையில், சரியான புள்ளி விபரங்கள் தெரியாதவர்களே அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் விமர்சித்து வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’