
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அதிக முக்கியத்தும் கொடுத்து பேசுவது முட்டாள்தனமானது என மீள்குடியேற்ற விவகார பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், 'தமிழ் மிரர்' இணையத்தளத்திற்கு அளித்த விசேட நேர்காணலில் கூறினார்.
தான், புலிகள் அமைப்பிலிருந்த போது தான் கே.பி.யை சந்தித்துள்ளதாகவும் ஆனால் கே.பி. கைது செய்யப்பட்ட பின்னர் அவரை சந்திக்கவில்லை எனவும் பிரதியமைச்சர் முரளிதரன் மேலும் தெரிவித்தார்.
கே.பி. வடபகுதி அபிவிருத்திக்குப் பொறுப்பாக நியமிக்கப் போவதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோது,
“இவை அனைத்தும் தவறான விடயம். இதேபோன்று கே.பியை முதலமைச்சராக அரசாங்கம் நியமிக்கப்போவதாக சரத் பொன்சேகா கூறினார். அடுத்த நாளே அதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தது. கே.பியை அந்தளவுக்கு முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது தவறானதும் முட்டாள் தனமானதுமாகும். கே.பி. இலங்கை சட்டத்திட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர். அரசாங்கத்தை குற்றம் சுமத்துவதற்காக சிலர் இவ்வாறான கதைகளை கூறுகிறார்கள். ஆனால் அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அவர் கைதி என்பதால் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டிய தேவை இருக்கிறது அது வேறு விடயம்” என பிரதியமைச்சர் முரளிதரன் பதிலளித்தார்.
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்துவதற்கு 5 வருடங்கள்வரை தேவைப்படலாம் எனக் கூறிய அவர், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் தங்கியுள்ள முஸ்லிம்கள் மீண்டும் வடக்கில் குடியேறினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை திருப்பிக்கொடுக்க வேண்டும் என தான் கூறியதாக வெளியான செய்திகளையும் நிராகரித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை விவகாரம், பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீள்குடியேற்றம் உட்பட பல விடயங்கள் குறித்து அவர் வழங்கிய செவ்வியை காணொளியில் காணலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’