வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 ஜூலை, 2010

தமிழீழம் மலர ஆட்சியை இழக்கத் தயார் என்றவன் நான் : ஜெயாவுக்கு கருணாநிதி பதிலடி!

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர், தமிழீழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான் என்று மு.கருணாநிதி அறிவித்துள்ளார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முதலமைச்சரின் அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

"ஜெயலலிதா அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் உங்களை 'சதிச் செயல் புரியும் மரண வியாபாரி' என்று வர்ணித்தும் இலங்கை இராணுவத்தில் பணி புரிந்தோர் எவ்வாறு போர்க் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்களோ, அதே போன்று கருணாநிதியும் ஒரு 'போர்க்குற்றவாளி' என்றும் குறிப்பிட்டிருக்கிறாரே, அந்த அறிக்கையைப் பார்த்தீர்களா? " என்று கேட்கப்பட்ட போது அவர் கூறியதாவது :

"பார்த்தேன். இதயம் உள்ளவர்கள் என்று நான் கருதியிருக்கிற பத்திரிகையாளர்கள் நடத்துகிற ஏடுகளில் அந்த அம்மையாரின் அறிக்கையை பெரிய தலைப்புகளில் பார்த்தேன். தொடர்ந்து உள்ளே படித்தும் பார்த்தேன். அறிக்கை வெளியிட்டுள்ள அம்மையாரும், அதற்கு ஒளியூட்டியுள்ள பத்திரிகை நண்பர்களும் என் இதயமார்ந்த நன்றிக்குரியவர்கள்.
ஏனென்றால் அந்த அறிக்கையின் கர்த்தாவாகிய அம்மையார் ஜெயலலிதா-இலங்கைப் பிரச்சினையில் ஏடாகூடமாக என்னென்ன பேசியிருக்கிறார், எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறார் என்பதை விளக்குவதற்காக விரிவான பதிலைச் சொல்ல வாய்ப்பளித்திருக்கிறார்கள் அல்லவா? அந்த வாய்ப்புக்காகத்தான் அவர்களை நன்றிக்குரியவர்கள் என்று குறிப்பிடுகிறேன்.

தீர்மானம்

'படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது.
மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்திய நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது'' என்று தமிழகச் சட்டப்பேரவையில் 16-4-2002 அன்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் என்பதை இதயம் என ஒன்றிருப்போர் இதற்குள் மறந்திருக்க மாட்டார்கள்.
இலங்கையில் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த போது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், மனிதச்சங்கிலிகளும் பொதுக்கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றபோது,

"இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டு மென்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப்பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக இராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்று 17-1-2009 அன்று அறிக்கை விடுத்த ஜெயலலிதாவின் பேனா முனையின் ஈரம் கூட இன்னும் காய்ந்திருக்காது.

அது மட்டுமா?

இலங்கையில் தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது - இதே ஜெயலலிதாதான் "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள்மனதில் எழுந்துள்ளது.
இலங்கையில் தற்போது நடக்கும் உள் நாட்டுப்போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை'' என்று கூறியதோடு - ``இலங்கையில் நடக்கும் யுத்தம் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும்-அதனால்தான் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு கருணாநிதி இரங்கற்பா எழுதுகிறார்'' என்றும் ஜெயலலிதா அறிக்கை விடுத்திருந்ததை எவரும் மற்ந்திருக்க மாட்டார்கள்.
2009ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது -இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன் நான் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் உணர்வார்கள்.
அதனால் தான் ஈழத்தந்தை செல்வாவின் அன்புமகன் சந்திரஹாசன் எனக்கெழுதிய கடிதத்தில் "ஈழத் தமிழர் இன்னல், அதையொட்டித் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு இவையெல்லாம் தங்களைப் பாதிக்கும் என்பதை அறிவோம். ஆயினும் தாங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் இலங்கையில் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது.
உலகத்தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட முடிகின்றது'' என்று எழுதினார்.
இதனை மனதிலே கொண்டுதான் சில 'ஜீவன்' களின் விமர்சனங்களை மறந்துவிடுகிறேன்."
இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’