"இலங்கை தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய சிறந்ததொரு இராஜதந்திரம் கொண்ட தலைவராக இருந்த அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை நாம் இழந்ததன் காரணமாக எமது இனத்திற்கு இப்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அயல்நாடான இந்தியாவினால் மதிக்கப்பட்டவராக இருந்தவர் அவர் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்று மாலை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற அமரரின் 21ஆவது சிரார்த்த தினவைபவத்தில் பேசியபோது கூறினார்.
1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் டில்லியில் நடைபெற்ற உலகத்தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி இலங்கை தமிழ் மக்களின் தலைவர் அமிர்தலிங்கம் என கூறி அறிமுகம் செய்து வைத்த நிகழ்வை நினைவுபடுத்தினார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்:-
"அமரரின் மரணத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்துள்ளனர். அவர் உயிருடன் இருந்தால் துன்பங்களை நீக்க அயல் நாடுகளுடைய ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டு இருப்பார். தமிழ் மக்களுடைய வரலாற்றில் அண்ணன் அமிர்தலிங்கத்தை நாம் இழந்தது தாங்கமுடியாத சோகமாகும்.
அவர் அயல்நாடான இந்தியாவின் உதவியுடன்தான் எமது பிரச்சினையை தீர்க்கமுடியும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுடைய நிலைமையினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தவே நாங்கள் இப்போது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுகளை நடத்திவருகின்றோம்" என்றார்.
இந்த வைபவத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,வினோ நோகராதலிங்கம், நகரசபைத் தலைவர் ஜி.நாதன், தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளைத் தலைவர் டேவிட் நாகநாதன் , மன்னார் கிளைத் தலைவர் மார்க் அன்ரனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை வவுனியா கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’