அதிமுக ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டபோது, ஜெயலலிதா என்ன செய்தார்? என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கேள்வி: தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வரும் ஆதரவை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டுமென்று தெரிவித்திருக்கிறாரே?.
பதில்: இந்தப் பிரச்னை குறித்து எனக்கு செய்தி தெரிந்ததும் உடனடியாக; நான்தான் முதலில் கண்டன அறிக்கை விடுத்ததோடு, அந்தக் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய்க்கான நிதியினையும் அரசின் சார்பில் வழங்கிடக் கூறியதோடு, பிரதமருக்கும், மத்திய மந்திரிகளுக்கும் அன்றைய தினமே கடிதங்களையும் எழுதினேன். 8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தி.மு.க.வின் மீனவர் அணியின் சார்பில் இதற்காகவே ஒரு ஆர்ப்பாட்டமே இன்று (நேற்று) காலையில் நடத்தப்பட்டுள்ளது. இதெல்லாம் முடிந்த பிறகு, விழித்துக் கொண்டவர்களில் ஒருவரான ஜெயலலிதா அதைப்பற்றி அறிக்கை விடுத்ததில், தி.மு.க மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், தி.மு.க. அமைச்சர்களை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார் என்றால், கிராமத்தில் பழமொழி சொல்வார்களே - "அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்" என்று - அதைப்போல ஜெயலலிதா பரிதாபகரமான எதிர்பார்ப்போடு - எப்படியாவது மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலக வேண்டும் - மத்தியிலே ஆட்சி கவிழ வேண்டும் - தமிழகத்திலும் ஆட்சி கவிழ வேண்டும் - ஊர் பற்றி எரிகிற நேரத்தில் கிடைத்தவரை ஆதாயம் பெறலாம் என்று அவர் துடிக்கிறார்.
அதன் விளைவுதான் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலக வேண்டும், மத்திய தி.மு.க. அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தவிக்கிறார். தனது வழக்கமான பாணியில் மக்களை ஏமாற்றலாம் என்று கருதுகிறார்.
கடிதம்...
இந்தப் பிரச்னைக்காக மத்திய அரசுக்கு நான் வழக்கம்போல் கடிதம் எழுதியுள்ளேன் என்கிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டபோது, ஜெயலலிதா என்ன செய்தார்? அவரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டு தானே இருந்தார்? மாறாக இலங்கைக்குப் படையெடுத்துச் செல்கிறேன் என்று புறப்பட்டாரா?
ஜெயலலிதா மட்டுமல்ல; ஜெயலலிதாவைப் போலவே சில பேர் தங்களை வீராதி வீரர்கள் என்று காட்டிக் கொள்ள -இந்தப் பிரச்சினையில் டெல்லிக்குக் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா என்று கேட்கிறார்கள். இந்தச் சூராதி சூரர்கள், சூரபத்மன் பேரர்கள் - டெல்லிக்குக் கடிதம் எழுதுவதற்குப் பதிலாக "இதோ புறப்பட்டு விட்டது பார்! எங்கள் போர்ப்படை" என்று இலங்கைக்கு கடற்படையை அனுப்பப் போகிறார்களா? அல்லது தாங்கள் சேமித்து வைத்திருக்கும் தொண்டர் படை வீரர்களை எல்லாம் "தொப்" "தொப்" என்று கடலில் குதித்து நீந்தியே சென்று கொழும்பு துறைமுகத்தில் கரையேறி அங்குள்ள கோட்டை, கொத்தளங்களை முற்றுகையிடச் சொல்லப் போகிறார்களா? ஒரு வேளை அப்படி அவர்கள் போட்டிருந்த திட்டத்தை நான் டெல்லிக்கு கடிதம் எழுதியதின் மூலமாக கெடுத்துவிட்டேனா என்பதைத் தெரிவித்தால் -அவர்களுடைய விவேகத்தைப் பாராட்டாவிட்டாலும், வீரத்தைப் பாராட்டவாவது முடியும் அல்லவா?.
கேள்வி: தமிழ்நாட்டில் தனது ஆட்சி அமைந்தவுடன் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் களையப்படும் என்று ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்திருக்கிறாரே?
பதில்: மீனவர்களின் இன்னல்கள் மாத்திரமா? அரசு ஊழியர்களின் ஊதியமும், போனசும்கூட பல மடங்கு உயர்த்தப்பட்டு, வேலை வாய்ப்புத் தடைச் சட்டத்தையும் அவரே முன்னின்று வாபஸ் வாங்கிக் கொண்டு, எஸ்மா - டெஸ்மா சட்டம், ஆசிரியர்களையும், அரசு அலுவலர்களையும் அடக்குவதற்குப் பயன்படுத்தக் கூடாது என்று அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு "அம்மா தாயே! வாழ்க! வாழ்க!" என்று அனைத்து இந்தியாவும் கோஷம் எழுப்பும்! இத்தனைக்கும் அந்த ஈவு இரக்கமுள்ள அம்மையாரின் ஆட்சி மீண்டும் வந்தாக வேண்டுமே? என்ன செய்வது? அத்தைக்கு மீசை முளைக்கிறதா என்று அடிக்கடி தடவி தடவிப் பார்த்துக் கொண்டால் மட்டும் மீசை முளைத்து விடுமா என்ன?" என்று கருணாநிதி கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’