வடக்கு, கிழக்கில் வலிகாமம் உட்பட ஏனைய இடங்களில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களை துரிதமாக அகற்றிவிடுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இது மட்டுமே அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை மீள உறுதிப்படுத்துவதாகவும் ஐயுறவு, அவநம்பிக்கையைத் தடுத்து நிறுத்துவதாகவும் அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அக்கட்சி எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு நேற்று சனிக்கிழமை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். வடக்கில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களும் நிரந்தர இராணுவ நிலைகளும் எனும் விடயம் குறித்து அவர் அனுப்பியிருக்கும் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் அறிக்கையை வாசித்ததையடுத்து அவசரமான விடயம் என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இக்கடிதத்தை எழுதுகிறேன். அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்திருந்த விடயம் (நேற்று முன்தினம்) ஊடகங்களில் அதிகளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. 2010 ஜூன் 7 இல் தங்கள் செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்த விடயங்கள் குறித்து நாங்கள் பிரஸ்தாபித்திருந்தோம். இராணுவ நோக்கத்திற்காக அதிகளவுக்குத் தேவைப்படுபவற்றை உடனடியாக அடையாளங் கண்டு ஏனைய காணிகளை மக்கள் மீளக்குடியேறுவதற்கு ஏற்புடையதாக அவற்றை விடுவிக்குமாறு தாங்கள் இராணுவத்திற்கு பணிப்புரை விடுத்திருந்ததாக தங்கள் பதில் அமைந்திருந்தது.
திருமுறிகண்டி, சாந்தபுரம், கேப்பாப்புலவு, சன்னார் போன்ற இடங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை. அவர்களை இந்தப் பகுதிகளில் மீளக்குடியேற்றுவதற்கு தாமதம் ஏற்பட்டிருப்பதற்கான காரணம் உரிய நேரத்தில் கூரைத் தகடுகள் வந்து சேராததனாலேயே என்று பசில் ராஜபக்ஷ எமக்கு அறிவித்திருந்ததை நீங்கள் ஞாபகத்தில் கொள்வீர்கள். இந்த மக்கள் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்க வேண்டுமென்ற எமது கேள்விக்கு இரு மாதங்களுக்குக் காத்திருக்க வேண்டுமெனவும் கப்பல் வந்தவுடன் உடனடியாக அவர்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதில்களை நம்பிக்கையுடன் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் தொடர்ந்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் நாங்கள் இணங்கியிருந்தோம். ஆயினும் இந்துபுரம், திருமுறிகண்டி போன்ற இடங்களில் காணிகளைச் சுவீகரிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக எமக்கு தகவல் கிடைத்திருந்தது (4811 ஏக்கர்). நிரந்தர இராணுவ நிலைகளை அமைக்கும் நோக்கத்திற்காக இக்காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எமக்குத் தகவல் கிடைத்திருந்தது. இத்தகைய பின்னணியில் அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகத் துறை அமைச்சரின் அறிவிப்பானது எமக்கும் தாம் வசித்த சொந்த இடங்களுக்கு வெளியே இருக்கும் மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாதுகாப்பு ரீதியான பரிசீலனைகளுக்காக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால், சம்பந்தப்பட்ட மக்களின் நலன்கள் குறித்து கவனத்தில் எடுக்கப்படுவது மிகவும் அவசியமானதாகும். நாட்டு மக்களின் பாதுகாப்பிலும் பார்க்க நாட்டின் பாதுகாப்பு முக்கியமானதல்ல. கட்டுநாயக்கா, இரத்மலானை, கொலன்னாவை மற்றும் அலரிமாளிகையின் சுற்றாடல் பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக உள்ளன. ஆனால், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த வலயங்களுக்குள் வசிக்காதிருப்பதற்கு தடை செய்யப்பட்டிருக்கவில்லை. இதேபோன்று வடக்கு, கிழக்கிலும் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இருந்தாலும் மக்கள் தமது சொந்த இடங்களில் வசிப்பதற்கு தடை செய்யாதிருக்கும் நிலைமை அவசியமாகும்.
தற்போது அமைச்சரவை அமைச்சர்கள் இருவரினால் முரண்பாடான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனால், சம்பந்தப்பட்ட மக்களுக்கு தாங்கள் நிலைமையைத் தெளிவுபடுத்துவது அவசியமான விடயமாக இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். தமது சொந்த இடங்களில் அவர்களை மீளக் குடியேற்றும் விடயம் தொடர்பான அவர்களின் ஆவலை பூர்த்திசெய்வது தொடர்பாக நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவது தேவையானதாகும். 1 1/2 வருடங்களுக்கும் மேலாக தமது வீடுகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டிருக்கும் மக்களின் உணர்வுகள் குறித்து கவனத்தில் கொள்வது அவசியமானதாகும். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களுடன் நல்லிணக்க நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு இது மிகவும் அவசியமானதாகும்.
வடக்கு, கிழக்கில் வலிகாமம் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் என்று அழைக்கப்பட்டவற்றைத் துரிதமாக அகற்றிவிடுமாறு தங்களை வலியுறுத்துகிறோம். தசாப்த காலத்திற்கும் மேலாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்தவர்களாக இருந்து வருகின்றனர். அந்தப் பகுதிகளில் மக்கள் மீளக்குடியேறுவதற்கு ஏற்புடையதாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கௌரவத்துடன் தமது வாழ்வை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’