இலங்கையில் தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்க அரசாங்கத்திடம் அமெரிக்க தொழிற்சங்கமொன்று தெரிவித்த புகார் தொடர்பாக கூட்டாக பதிலளிப்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு, வர்த்தக வாணிப அமைச்சு மற்றும் தொழிலாளர் விவகார அமைச்சு என்பன தயாராகி வருகின்றன.
சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் ஒன்றியம் (FTZWU) தெரிவித்த புகாரொன்றையடுத்து அமெரிக்க கைத்தொழில் நிறுவனங்களின் தொழிலாளர் கவுன்ஸில், அமெரிக்க அரசாங்கத்திடம் இது தொடர்பாக மனுவொன்றைக் கையளித்திருந்தது.இதேவேளை, இலங்கையில் தொழிலாளர் உரிமைகள் தீவிரமாக மீறப்படுவதாக FTZWU தலைவர் அன்டன் டி மார்கஸ் டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார். சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் சங்கம் அமைப்பதற்கும் கூட்டாக பேரம் பேசுவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த மூவரடங்கிய குழுவொன்று ஜூலை 31 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. அக்குழுவினர் தொழிற்சங்கங்கள், அரசாங்கப் பிரமுகர்கள், தொழில்தருநர்கள் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளனர். பின்னர் வாஷிங்டனில் அமெரிக்க ;இராஜாங்கத் திணைக்களத்தில் இது குறித்து பகிரங்க விவாதம் நடைபெறவுள்ளது எனவும் அன்டன் டி மார்க் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கையின் புகழை கெடுப்பதற்கு அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் நிதியளிக்கப்பட்ட திட்டமொன்றை FTZWU முன்னெடுத்துச் செல்கிறது என அமைச்சர் காமினி லொக்குகே குற்றம் சுமத்தியுள்ளார். 2008 ஆம் ஆண்டு FTZWU சமர்ப்பித்த மனுவை அமெரிக்க கைத்தொழில் நிறுவனங்களின் தொழிலாளர் கவுன்ஸில் புறக்கணித்தாகவும் ஆனால் அன்டன் மார்கஸ் 2009 ஆம் ஆண்டிலும் இவ்விடயத்தை மீண்டும் கிளப்பியதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’