வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 17 ஜூலை, 2010

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண கலைஞரின் ஆலோசனையை நாடுகிறார் இந்தியப் பிரதமர்

இலங்கைத் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வழிமுறைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் அபிப்பிராயத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாடியுள்ளார்.
அரசியல் இணக்கப்பாடு ஊடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வைக் காணும் வழிமுறைகள் தொடர்பாக கருணாநிதியின் அபிப்பிராயத்தை பிரதமர் மன்மோகன் சிங் நாடியுள்ளதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது. இந்த விடயம் குறித்து மன்மோகன் சிங் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் பிரதிகள் ஊடகங்களுக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள தமிழர்கள் கௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு இயலுமான அளவுக்கு ஏற்புடைய சகலவற்றையும் எனது அரசாங்கம் நிச்சயமாக மேற்கொள்ளும் என்று கலாநிதி மன்மோகன் சிங் கூறியுள்ளார். நான் உங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருக்கிறேன். இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு இதயசுத்தியுடனான நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள் குறித்து தங்களின் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கப்பாடு மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென நாங்கள் தொடர்ச்சியாக ஆலோசனை கூறி வந்துள்ளோம் என்று மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணுமாறு கொழும்பை இந்திய மத்திய அரசாங்கம் அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டுமென கடந்த ஜூலை 3 இல் கருணாநிதி இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்திற்கு அனுப்பிய பதிலிலேயே மன்மோகன் சிங் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். இலங்கையின் வட, கிழக்குப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் துரித புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே மத்திய அரசாங்கம் 500 கோடி ரூபாவை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் 50 ஆயிரம் வீடுகளை இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணித்துக்கொடுப்பதற்கு நாங்கள் உதவவுள்ளோம். அந்தப் பகுதிகளில் வழமையான பொருளாதார நடவடிக்கைகளை மீள ஏற்படுத்துவதற்கு நாங்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். உள்சார் கட்டமைப்புகளை நிர்மாணித்தல், வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் வழமையான பொருளாதார செயற்பாடுகளை மீள ஏற்படுத்த முயன்று வருகிறோம் என்றும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார். கடந்த மாதம் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்ததுடன், அண்மையில் இலங்கைப் பாராளுமன்றத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அடங்கி தூதுக்குழுவைத் தான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மன்மோகன் சிங் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’