இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் சே வாய் சுவான் இன்றையதினம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வாசஸ்தலத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் இலங்கையின் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் அரச சேவையில் உள்ளோருக்கு ஏற்கனவே சிங்கப்பூர் அரசாங்கத்தினால் தொழில்நுட்ப பயிற்சிகளும் மற்றும் பல்வேறு தரப்பட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினூடகவும் தொழிற்பயிற்சிகளை வழங்கமுடியுமென உயர்ஸ்தானிகர் சே வாய் சுவான் தெரியப்படுத்தினார். குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சுயதொழில் முயற்சிகளில் இப்பங்களிப்பினை வழங்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தமது அமைச்சினூடாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்படவிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் வடபகுதியில் அமைக்கப்படவிருக்கும் புற்றுநோய் மருத்துவமனை குறித்தும் பிரஸ்தாபித்த அமைச்சர் அவர்கள் அதற்கு பெருமளவு நிதியுதவி தேவைப்படுவதையும் தெரியப்படுத்தினார். இச்சந்திப்பின் இறுதியில் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு உயர்ஸ்தானிகர் சே வாய் சுவான் அழைப்பு விடுத்த அதேவேளை கைப்பணிப்பொருள் மற்றும் உள்ளுர் உற்பத்திகள் அடங்கிய சிறு பொதி ஒன்றினையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்பளிப்புச் செய்தார்.
இச்சந்திப்பின்போது அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி அமைச்சரின் ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’