வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஜூலை, 2010

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: கருணாநிதி கடும் கண்டனம்; பிரதமருக்கு கடிதம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "7-7-2010 பிற்பகல் 12 மணி அளவில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு காவல் சரகத்தைச் சேர்ந்த வெல்லப்பள்ளம் கிராமம், மீனவர் காலனியை சேர்ந்த செல்லப்பன் உள்ளிட்ட நான்கு பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் இருபது கடல் மைல் தொலைவில் இரவு பத்து மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை பயங்கரமாக தாக்கியதாகவும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், வலைகளையும் கடலிலே தூக்கி எறிந்ததாகவும், அந்த தாக்குதலில் செல்லப்பன் என்ற மீனவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு சில மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததாகவும் செய்தி வந்துள்ளது.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை இவ்வாறு கொடுமை புரிவதென்பது இது முதல் முறையல்ல. தொடர்ந்து நடைபெறும் தொடர்கதையாக உள்ளது.
தமிழக மீனவர்களின் இந்த துயர நிலை குறித்து - தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும், தொடர்புடைய அமைச்சர்களுக்கும் இதுவரை பலமுறை நேரிலும், கடிதங்கள் மூலமும் கோரிக்கைகளை விடுத்தும் தமிழக மீனவர்களின் அவலம் நின்றபாடில்லை.
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் சித்திரவதைக்கும், கொலைக்கும் ஆளாகும்போது- மத்திய அரசிடம் நாம் முறையிடுவதும், அவர்களும் நம்மைச் சமாதானப்படுத்துகின்ற முயற்சியிலே ஒரு கடிதமோ, வேண்டுகோளோ இலங்கை அரசுக்கும் விடுப்பதும்- ஆனால் அதற்கு பிறகு சில நாட்களில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெறுவதும் மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையே பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்று ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்திலே கூட, தமிழக மீனவர்களின் இந்நிலை குறித்து விரிவாகப் பேசப்பட்டு- தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தால் கூட, அவர்களை தாக்குவதோ, கொலை செய்வதோ கூடாது என்றும், முறைப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர இதுபோன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபடக்கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு மாறாக, தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் இக்கொடுமையைக் களைய மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு, இந்த நிகழ்ச்சி பற்றிய உண்மை விவரமும் தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தியாக வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்," என்று கருணாநிதி கூறியுள்ளார்.

மீனவர் செல்லப்பன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
இதனிடையே, தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், 7-7-2010 அன்று இரவு கடலில் மீன் பிடிக்கச்சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், வெல்லப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
அந்தச் செய்தியினை அறிந்த முதல்வர் கருணாநிதி, செல்லப்பன் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டதோடு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிட ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்த நிதி நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் மூலமாக செல்லப்பன் குடும்பத்தினருக்கு உடனடியாக வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமருக்கு கருணாநிதி அவசர கடிதம்
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், 'கடல் பகுதியில், மீன் பிடிப்பதற்கான தகுதியைப் பெற்று இருக்கும் தமிழக மீனவர்களுக்கு, உடல் ரீதியாக எந்தவிதத்திலும் துன்புறுத்தக் கூடாது என்று, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறி, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு, இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு வருவது பற்றி நான் உங்கள் (பிரதமர் மன்மோகன் சிங்) கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
7-7-2010 அன்று இரவு நடந்த சம்பவம் தொடர்பாக, இன்று (8-7-2010) நான், அளித்த பத்திரிகை செய்தி நகலையும், இதனுடன் இணைத்துள்ளேன். அது என் சுய விளக்கம் ஆகும்.
எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்,' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள இந்த கடிதத்தின் நகல், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’