இலங்கை வடபுலத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய தூதுக்குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி உள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஏற்கனவே சுனாமி அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை மேற்கொண்ட அனுபவம் கொண்ட மேற்படி குழுவினர் இலங்கையின் வடபகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை அண்மையில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக யாழ். பொதுநூலகத்திற்கு நான்காயிரம் நூல்களையும் யாழ்ப்பாணத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட ஆறு பாடசாலைகளுக்கு கணணித் தொகுதிகள் மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கியதுடன் முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேச மாணவர்களுக்கு 250 துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கியுள்ளமை மற்றுமோர் விடயமாகும். அத்துடன் பல தடவைகள் மெனிக் பாம் நிவாணக் கிராமத்திற்கும் விஜயம் மேற்கொண்டு அங்கு தங்கியுள்ள மக்களின் தேவைகளிலும் பங்கெடுத்தும் உள்ளனர்.
இந்நிலையில் வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்வதன் ஊடாக பொருளாதார மேம்பாட்டிலும் பங்குகொள்ள தயாராக உள்ளதாகவும் மலேசிய தூதுக்குழுவினர் தெரிவித்தனர். இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்விடயத்தினை சார்ந்ததாக தமது அமைச்சு செயற்படுவதை எடுத்துக் கூறியதுடன்இ மக்கள் நலன் சார்ந்த முதலீடு மேற்கொள்ளக் கூடிய துறைகள் குறித்தும் எடுத்தக் கூறினார். குறிப்பாக ஆனையிறவு உப்பு உற்பத்தித்துறை விவசாயம் மேற்கொள்ளப்படாத நிலங்களில் பாரியளவிலான பாம் மர வளாப்பு கடற்றொழில் அபிவிருத்தி மூலம் தகரத்தில் அடைக்கப்படும் மீன் உற்பத்தி ஆடை உற்பத்தித் தொழிலகங்கள் அமைத்தல் பாரியளவு முருங்கைக்காய் உற்பத்தி மூலம் உயிரி எண்ணெய் உற்பத்தி மற்றும் விவசாய கால்நடை வளர்ப்பு போன்ற பல துறைகள் குறித்து தெரிவித்தபோது இவை குறித்து தமது ஆர்வத்தை மலேசிய தூதுக்குழுவினர் வெளிப்படுத்தினார்கள். மேற்படி திட்டங்கள் குறித்த பிரேரணைகளை தமக்கு சமர்ப்பிக்கும் படியும் இலங்கை முதலீட்டு சபை உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்புகொண்டு விரைவில் அவற்றை ஆரம்பிக்க தம்மால் உதவமுடியும் என்பதையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்துக் கூறினார்.
மேலும் மக்களின் பங்களிப்புடன் கடந்த இருபது வருடங்களில் இழந்தவற்றை இருவருடங்களில் மீளக் கட்டியெழுப்பும் தமது திட்டத்திற்கு மலேசிய தூதுக்குழுவினரின் ஒத்துழைப்பு நிச்சயமாக உதவும் என்பதையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளிப்படுத்தினார். இதேவேளை தமிழ்க் கட்சிகள் ஓன்றிணைத்து அமைத்துள்ள அரங்கம் தொடர்பாக கேட்டறிந்த தூதுக்குழுவினர் தமது ஆதரவினையும் வரவேற்பினையும் தெரிவித்துக் கொண்டனர்.
இச்சந்திப்பின் இறுதியில் மலேசியாவிற்கு வருகை தருமாறு தூதுக்குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’