யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் அவர்கள் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கு தென்னை நாற்றுக்களை வழங்கி வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
தென்மராட்சி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (23) தென்மராட்சி பிரதேச செயலர் திரு.எஸ் சிறினிவாசன் தலைமையில் தென்னை நாற்று விநியோகம் இடம்பெற்றது.
பிரதேசசெயலாளர் விருந்தினர்களையும் பயனாளிகளையும் வரவேற்று மீளக் குடியமர்ந்துள்ள 1000 குடும்பங்களுக்கு தலா மூன்று நாற்றுக்கள் வழங்குவதாகவும் பயனாளிகளின் போக்குவரத்துச் செலவிற்கு 30 ரூபா வீதம் வழங்குவதாகவும் இத் திட்டத்தை தென்னை அபிவிருத்திச் சபை செயல்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
தென்னை அபிவிருத்தி சபை உத்தியோகத்தர் திரு.எஸ்.ஜெகநாதன் தனதுரையில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் மற்றும் வடமாகாணம் பூராவும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 15ம் திகதி தெல்லிப்பளை பிரதேசசெயலர் பிரிவில் ஆரம்பித்து அதேதினத்தில் உடுவில் சண்டிலிப்பாய் சங்கானை பிரதேச செயலக பிரிவுகளிலும் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். தற்போது இப்பிரதேச செயலர் பிரிவில் மீளக்குடியமர்ந்த 1600 குடும்பங்களின் 1000 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக வழங்குவதாகவும் பின்பு அனைத்து குடும்பங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் கருத்துத் தெரிவிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பயன்படுத்தி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரினதும் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் தயாராகவுள்ளதாகவும் மக்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய அச்சமற்ற சூழலை ஏற்படுத்துவதன் மூலம் நாம் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் இப்பணியை மேற்கொள்வதற்கு சகல சமூக மட்ட அமைப்புக்களையும் பங்கேற்று செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி.யின் வலிகாம பிரதேச இணைப்பாளர் ஜீவன் உட்பட பெருமளவிலான பயனாளிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’