மூன்றாவது உலக மகா யுத்தம் ஒன்று உருவாகுமேயானால் அது தண்ணீரினால்தான் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே இந்த உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது என இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
'சிறுதுளி பெருவெள்ளம்; அன்றும் - இன்றும்' என்ற தலைப்பில் கோவையில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு பற்றிய கண்காட்சியில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அப்துல் கலாம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில்…
கடந்த 15 வருடங்களின் முன்னர் பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் தண்ணீர் விற்பனைக்கு வருமென நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் இன்று வெளிநாட்டு முதலீட்டு கம்பனிகள் எல்லாம் இந்தியாவில் 'மினரல் வோட்டர்' கம்பனிகளை ஆரம்பித்திருக்கிறது. இது நாளடைவில் இந்திய குடிநீருக்கே ஆபத்தாக முடியும். நம்மைச் சுற்றியிருக்கிற நாடுகளிலும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அந்த நாடுகள் ஆயுதபலமுள்ள நாடுகள். ஆகையினால் எதிர்காலத்தில் இந்தியாமீது தண்ணீர் கேட்டு போர்தொடுக்காமல் இருக்கப்போவதில்லை. இவற்றையெல்லாம் நிவர்த்திசெய்ய வேண்டுமானால் நதிகளின் இணைப்பு அவசியம்.
அரசியல் லாபத்திற்காக நதிநீர் இணைப்பில் பல சிக்கல்கள் நிலவுகின்றன. ஆட்சிகள் மாறுகின்ற பொழுது நதிநீர் இணைப்பு திட்டங்களும் மாறிவிடுகின்றன. எனக்கொரு கனவிருக்கிறது. இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள நதிகளை இணைக்கவேண்டும். அதன் மூலம் பல மில்லியன் மக்கள் பயனடைய வேண்டும் என்பதாகும். இக்கனவு நினைவாகவேண்டுமானால் இளைஞர்களால்தான் முடியும். தண்ணீர் பாதுகாப்பு படையணியினை இளைஞர்கள் உருவாக்க வேண்டும். நல்ல இளைஞர்களால்தான் நாளைய பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும் அப்துல் கலாம் தொடர்ந்து உரையாற்றினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’