தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் இன்று 13ம்திகதி செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 16ம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றனர். இன்றுகாலை 10மணியளவில் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் சமாதியில் மௌன அஞ்சலியும், மலராஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. இதில் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினர்களான வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன், சிவநேசன் (பவன்), பீற்றர் மற்றும் புளொட் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும், வவுனியா நகரசபை உறுப்பினர்களான குமாரசாமி, பார்த்தீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள புளொட் அலுவலகங்களிலும் இன்று வீரமக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இறுதிநாளான 16ம்திகதி செயலதிபர் உமாமகேசுவரன் சமாதி வளாகத்தில் மலராஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் அஞ்சலிக் கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளது. அன்றையதினம் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள புளொட் அலுவலகங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.




















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’