தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போதெல்லாம், நான் ஏன் தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு வந்ததுண்டு என்று ஜெர்மனிய பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை பேராசிரியை கூறினார்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று இடம்பெற்ற தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கேற்ற வெளிநாடு வாழ் தமிழ் அறிஞரும் ஜெர்மனிலுள்ள 'ஜூகொலின்' பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை தலைவருமான வுல்ரிக் நிக்லஸ் என்பவரே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது :
"ஜெர்மனிலுள்ள ஜூகொலின் பல்கலை கழகத்தில் நான்கரை ஆண்டுகளாக தமிழ்ஆராய்ச்சித்துறை தலைவராக இருந்து வருகிறேன். தமிழ் இலக்கியத்தில் எனக்கு ஆர்வம் உண்டு. தொல்காப்பியம், திருவாசகம், தேவாரத்தை முற்றிலுமாக படித்து முடித்து அதில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளேன்.
கல்கி எழுதிய சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகியவை எனக்கு அத்துப்படி. தமிழ், பாரம்பரியமான, முதன்மையான, தொன்மையான மொழி என்பதை கடந்த 5 ஆண்டுகால தமிழ் ஆராய்ச்சியின் மூலமாக தெரிந்து கொண்டேன்.
ஆனால் எனக்கு சிறுவயது முதலே தமிழில் ஈடுபாடு அதிகம். ஏனென்றால் நான் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். நடிகர் சிவாஜி கணேசனின் வீரம் செரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை திரும்ப திரும்ப பார்ப்பதுண்டு.
உ.வே.சா. தமிழுக்கு செய்த தொண்டு மகத்தானது. தமிழ் தனித்துவமான மொழியாக இருப்பதால் தனியானதொரு இலக்கணம் ஏற்படுத்துப்பட்டுள்ளது. இதிலுள்ள இலக்கணம் எந்த ஒரு மொழியிலும் இல்லை. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் போன்ற சங்ககால இலக்கியங்களை படித்துள்ளேன்.
அதிலுள்ள வரிகள் அதற்குரிய அர்த்தங்களைப் படித்தால் நான் ஏன் தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. அதனால் நான் பாண்டிச்சேரியை சேர்ந்தவரை என்னுடைய கணவராக ஏற்றுக்கொண்டேன்.
பிறப்பில் ஜெர்மனியை சேர்ந்தவளாக இருந்தாலும், என்னுடைய புகுந்த வீடு தமிழகம். எனக்கு பாண்டிச்சேரியில் சொந்த வீடு உள்ளது. அதனால் ஆண்டுக்கொருமுறை தமிழகம் வருவேன். வரும்போதெல்லாம் தமிழகத்திலுள்ள தமிழறிஞர்களைச் சந்திப்பது வழக்கம்.
தமிழில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதுமையை பற்றியும் தெரிந்து கொள்வேன். புதிய புத்தகங்கள், புதிய கட்டுரைகளை வாங்கிப் படிப்பேன். எனக்கு நவீன கால கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும், கவிஞர் வைரமுத்து எழுதும் கவிதைகளை ஒன்று விடாமல் படித்துவிடுவேன்.
மேலும் தமிழ் வளர்ச்சி குறித்தும், தமிழ் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதில் பங்கேற்று பதிவு செய்து கொள்வதோடு, தமிழ் நண்பர்களோடு அடிக்கடி தொடர்பு வைத்துக்கொள்வேன்."
இவ்வாறு பேராசிரியர் வுல்ரிக் நிக்லஸ் கூறினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’