வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 13 ஜூன், 2010

இந்தியாவின் கைப்பிடியிலிருந்து நெளிந்து ஊர்ந்து செல்கிறது இலங்கை



சுதா ராமச்சந்திரன் - ஏசியா டைம்ஸ்

இலங்கை மீது இந்தியா செல்வாக்கு செலுத்துவது குறைவடைந்து செல்கிறது. அதேசமயம், தீவில் சீனாவின் பிரசன்னமானது வளர்ச்சி பெற்று வருகிறது. பெய்ஜிங் உதவியளிக்க முன்வந்திருக்கும் நிலையில், தெரிவு செய்து திருப்தியளிக்கா விடின் நிராகரிக்கும் நிலைப்பாட்டில் இலங்கை அரசாங்கம் இருப்பதாகத் தோன்றுகிறது.
நிபந்தனைகளுடன் இந்தியா உதவியளிக்க முன்வருவது குறைவான வசீகரம் பெற்றதாக இருக்குமெனத் தென்படுகிறது என்று ஏசியா டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் பிடியிலிருந்து ராஜபக்ஷ நெளிந்து ஊர்ந்து செல்கிறார் என்ற தலைப்பில் ஏசியா டைம்ஸ் இணையத்தளத்தில் சுதா ராமச்சந்திரன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கட்டுரையொன்றை எழுதியுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு, மின்சக்தி, ரயில் துறை, புனர்வாழ்வு, கலாசாரப் பரிமாற்றங்கள் என்பவை தொடர்பான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த வாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைத் தலைவருக்கு புதுடில்லியில் இந்திய அரசாங்கம் செங்கம்பள வரவேற்பளித்துள்ளது. தமிழ் நாட்டிலும் ஏனைய தென்னிந்திய மாநிலங்களிலும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. புலிகளுக்கு எதிரான யுத்தம் மற்றும் பொதுமக்கள் இழப்புகள் என்பவை தொடர்பாக ராஜபக்ஷவின் அரசாங்கம் மீது தென்னிந்தியாவில் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டன.

வருடாந்த பாதுகாப்பு பேச்சுவார்த்தை மற்றும் உயர்மட்ட இராணுவ பரிவர்த்தனைகள் என்பனவை தொடர்பாக இருதரப்பும் இணங்கிக் கொண்டிருப்பதை ராஜபக்ஷவின் விஜயம் காண்பிக்கின்றது. குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பான பரஸ்பர சட்ட உதவி மற்றும் தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் பரிமாற்றம் என்பவை தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இவை பாதுகாப்பு மற்றும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் இந்தியாவில் பயிற்சியளிப்பதும் அதிகரிக்கப்படவுள்ளது. சக்தி வளத்துறையில் ஒத்துழைப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட பகுதியில் ரயில் போக்குவரத்துக்கான உள்சார் கட்டமைப்பை மீள ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இந்தியா இணங்கியுள்ளது. 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொடுத்தல், விதைவைகளுக்குப் புனர்வாழ்வுத்திட்டம், இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளவும் இந்தியா உறுதியளித்துள்ளது.

இதேவேளை, இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதில் இலங்கை அரசாங்கம் தயக்கத்தைக் கொண்டிருப்பது இந்தியாவிற்கு சில ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன், பரந்துபட்ட பொருளாதார பங்குடமை உடன்படிக்கையை (சீபா) இந்தியாவுடன் மேற்கொள்வதற்கு தயங்குகின்றமையும் இந்தியா தரப்பில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் ஏசியா டைம்ஸ் இணையத்தளத்திற்குக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்புகள் அண்மைய வருடங்களில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி கண்டது. சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தசாப்த காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஜனாதிபதியின் விஜயத்தின் போது சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சீபா தொடர்பான எதிர்ப்பானது தேசியவாத தன்மை கொண்டது. பொருளாதார அடிப்படையான விடயமாக அது காணப்படவில்லையென்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொருளாதார விரிவுரையாளர் சுமணசிறி லியனகே கூறியுள்ளார். இலங்கையிலுள்ள சில கைத்தொழில் அதிபர்களும் வர்த்தகர்களும் சீபா தொடர்பாக அச்சம் கொண்டுள்ளனர். அந்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டால் இந்தியாவிலிருந்து அதிகளவு இறக்குமதி இலங்கைக்கு வந்துவிடுமெனவும் அதனால் உள்நாட்டு உற்பத்திகளுக்கு பாதிப்பு ஏற்படுமெனவும் அவர்கள் கருதுகின்றனர்.

சிங்கள தேசியவாதக் கட்சிகளான ஜே.வி.பி., தேசிய சுதந்திர முன்னணி ஆகியவை இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

"சீபா தொடர்பான அவர்களுடைய நிலைப்பாடானது இந்தியா ஏகாதிபத்திய அதிகாரம் உள்ளது என்ற அவர்களின் பழைய கருத்தை அடிப்படையாகக் கொண்டதாகுமென சுமண சிறி லியனகே கூறியுள்ளார்.

இதேவேளை இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் விடயத்தில் இணக்கப்பாடொன்றை ராஜபக்ஷ காண்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என இந்தியா கருதிவந்தது. ஆனால், அது இதுவரை இடம்பெறவில்லை. இந்தியா வலியுறுத்தி வருகின்றபோதும் கூட அது இடம்பெறவில்லை என அதிகாரியொருவர் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக போதியளவுக்கு இலங்கையர்களை இந்தியா வலியுறுத்தி வருவதாக யாவருமே கருதவில்லை.

"இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக உண்மையிலேயே ஆர்வம் கொண்டதாக இந்தியா இருப்பதாகத் தோன்றவில்லை என்ற கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சூசைப்பிள்ளை கீதபொன்கலன் கூறியுள்ளார். அரசியல் தீர்வை முன்னெடுக்குமாறு காலத்திற்குக் காலம் கொழும்புக்கு, இந்தியா அழைப்பு விடுக்கின்றதாயினும் இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளை சாந்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இதனைச் செய்வதாகத் தென்படுகிறது. ஏனைய விடயங்களில் தனது கோரிக்கைகளில் இணங்கிக்கொள்வதற்காக இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் காணுமாறு அழுத்தம் கொடுப்பதிலும் பார்க்க ஏனைய விவகாரங்களுக்கு இந்தியா அழுத்தத்தைக் கொடுக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.

புதுடில்லியில் சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பான உறுதிப்பாடு குறித்து ராஜபக்ஷ பேசியுள்ளார். ஆனால், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வட, கிழக்கு மாகாணங்களுக்கு அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வு பொதியின் தேவை குறித்து வலியுறுத்தியிருக்கிறார்.

இரு அரசாங்கங்களும் திரும்பத் திரும்ப வெளிப்படுத்தும் வார்த்தைகள் இவையாகும். நெருக்கடிக்குத் தீர்வாக 13 ஆவது திருத்தமும் அதற்கு அப்பாலும் என்ற நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் 13 ஆவது திருத்தம் அதிகாரப் பகிர்வாகக் கொண்டுவரப்பட்டதாகும். இப்போது 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லுமாறு புதுடில்லி கொழும்பைக் கோருகிறது. ஆனால், விமர்சிப்போர் இந்தத் தீர்வானது செயற்பட முடியாத தன்மையுடையதாக இருப்பதாகக் கூறுகின்றனர். வட, கிழக்கு மாகாணம் ஒரே அலகாக இனிமேலும் இருக்கப் போவதில்லை. நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இரு வருடங்களுக்கு முன்னர் இரண்டு மாகாணங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீண்டும் இலங்கை அரசாங்கம் இணைத்துக்கொள்வதற்கான சாத்தியப்பாடு காணப்படவில்லை. 13 ஆவது திருத்தமும் அதற்கு அப்பாலும் என்று கதைப்பதன் மூலம் அரசியல் தீர்வு பற்றி கதைப்பதை இந்தியா அப்புறப்படுத்திவிட்டது என்று கீத பொன்கலன் வாதிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்குக் கடுமையான அழுத்தத்தை இந்தியா கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை இந்திய அதிகாரிகள் நிராகரிக்கின்றனர். அரசியல் இணக்கப்பாட்டை முன்னெடுப்பதற்கான அரசியல் விருப்பத்தை ராஜபக்ஷவின் அரசாங்கம் கொண்டிருக்கவில்லையென அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

புலிகளுக்குப் பின்னரான காலகட்டத்தில் ராஜபக்ஷவும் சிங்களவர்கள் பலரும் வெளிநாட்டு ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதில் விருப்பத்தைக் காண்பிக்கவில்லை. இலங்கையின் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் தொடர்பான சர்வதேச விமர்சனங்களுக்கு அவர்கள் அளிக்கும் பதில் மிகவும் கடுமையான தன்மைகொண்டதாக காணப்படுகிறது. இனநெருக்கடிக்கு எவ்வாறு தீர்வு காணப்படுவேண்டுமென்பது குறித்து வெளிமட்ட சிபாரிசுகளை உள்வாங்கிக் கொள்வதில் அவர்கள் விருப்பமற்றவர்களாக உள்ளனர். புலிகளுக்குப் பின்னரான இலங்கையில் வெற்றிக் களிப்பும், கர்வமும் உரம் பெற்றிருக்கின்றமை சான்றாகக் காணப்படுகிறது. யாவற்றிற்கும் மேலாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் மோதல் முடிவடைந்து விட்டதாக இலங்கையிலுள்ள பலர் நம்புகின்றனர். தீர்வு காண்பதற்கு எதுவும் இல்லை என்ற தன்மை காணப்படுகிறது.

இலங்கையில் தனது செயற்திட்டங்களை மேற்கொள்வதும் புனர்வாழ்வை முன்னெடுப்பதும் இந்தியாவிற்கு முக்கியமானதாகும். அரசாங்கத்தின் மீது இந்தியாவின் செல்வாக்குக் குறைவடைந்து வருகிறது. இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்திருக்கிறது. சீனர்கள் உதவி வழங்க முன்வரும் நிலையில், இலங்கை அரசாங்கமானது தெரிவு செய்து திருப்தியில்லாவிடின் நிராகரிக்கும் நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. சூழ்நிலைகளின் அடிப்படையில் நிபந்தனையுடனான இந்தியாவின் உதவியானது அதிகளவிற்கு கவர்ச்சிகரமாக இருக்காத தன்மைமையே வெளிப்படுத்துகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’