வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 27 ஜூன், 2010

கிளிநொச்சி அம்பாள்குளப் பகுதியில் புதிதாகப் பாடசாலை அமைப்பதற்கு நடவடிக்கை

கிளிநொச்சி அம்பாள்குளப் பகுதியில் புதிதாகப் பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று நேற்று அம்பாள்குளம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) 
அம்பாள்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் திரு.கிருஸ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் பாடசாலையை அனைத்து வளங்களுடனும் நிர்மாணிப்பதற்கு தான் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது பிள்ளைகளையும் கணவர்மாரையும் விடுவிப்பதற்கு உதவுமாறும் அத்துடன் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தாம் கைவிட்டுச் சென்ற பொருட்களை மீட்டுத் தருமாறும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இவற்றுக்குப் பதிலளித்த திரு.சந்திரகுமார், மிகவிரைவில் ஏனைய முன்னாள் போராளிகளும் விடுவிக்கப்படுவதற்கான முயற்சிகளை தாம் அரசாங்கத்துடன் கலந்துரையாடி மேற்கொள்வதாகவும் சுயதொழில் முயற்சி மகளிர் அமைப்புக்களின் ஊடாக உதவித்திட்டங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அம்பாள் குளம் பிரதேச கிராம அலுவலர் ஜெயச்சந்திரனும் கலந்து கொண்டார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’