கலைஞர் கருணாநிதி தமது ஆற்றலைப் பயன்படுத்தி மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு சாதாரண மாநாடல்ல. இது தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்கும் மிகப்பெரிய மாநாடாகவே நாம் காண்கின்றோம் என உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நேற்று வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவித்தார்.
பேராசிரியர் சிவத்தம்பி தமது வாழ்த்துரையில் மேலும் தெரிவித்ததாவது :
"உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்க் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் விதத்தில் பூரணத்துவம் வாய்ந்த நூலொன்றை வெளிக்கொண்டுவர காத்திரமான நடவடிக்கையை முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்மொழி இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கின்றது. இது உலகளாவிய மொழியாக வியாபித்துக் காணப்படுகிறது. இந்த நேரத்தில் முதல்வர் கருணாநிதியிடம் நான் முக்கியமானதொரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
வெளியே வாழ்கின்ற தமிழர்கள், தமிழ் மீது பற்றுக் கொண்ட தமிழரல்லாதோர் என அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில், தமிழின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளும் பொருட்டு தமிழ்க் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை விளக்கக் கூடிய பூரணத்துவம் பெற்ற நூலொன்றைக் கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றைய நிலையில் இது மிகவும் முக்கியமானதாகும். எதிர்காலத்துக்கு மிக அவசியமானதுமாகும்.
தமிழ்மொழியை மேம்படுத்துவதற்கு நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. நம் முன்னே ஏராளமான பணிகள் காத்துக் கிடக்கின்றன.
உதாரணமாக 'டொட்காம்' என்ற வார்த்தைக்கு இன்னமும் தமிழில் சரியான வார்த்தை காணப்படவில்லை. அதனை நாம் உருவாக்க வேண்டும். இதுபோன்று இன்னும் நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து பூரணப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
சங்கத்தமிழ் இலக்கியம், சமயச் சார்பற்ற இலக்கியம், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று போதித்து தமிழை மேலோங்கச் செய்தவர்கள் தமிழர்கள்.
கலைஞர் கருணாநிதி தமது ஆற்றலைப் பயன்படுத்தி மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துவிட்டார். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒரு சாதாரண மாநாடாக எண்ணிப் பார்க்க முடியாது.
இது தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்கும் மிகப்பெரிய மாநாடாகவே நாம் காண்கின்றோம்."
இவ்வாறு பேராசிரியர் சிவத்தம்பி தமது வாழ்த்துரையில் தெரிவித்தார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’