வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 ஜூன், 2010

ஜனாதிபதி தலைமையிலான எமது இந்திய விஜயம் பூரண வெற்றியளித்துள்ளது. இந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்தியாவிற்கு நாம் மேற்கொண்ட உயர்மட்ட விஜயமானது பூரண வெற்றியளித்துள்ளதாக இந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

இன்று (16) மாலை அமைச்சரின் பணிமனையில் இந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகிய முக்கியமான விடயங்களில் இந்திய இலங்கை அரசாங்கங்களிடையே இணக்கம் காணப்பட்டுள்ளது. நிவாரணக் கிராமங்களில் மீதமாக உள்ள மக்களை மீள்குடியேற்றுவதில் கண்ணிவெடியகற்றுதல் காணியை இனங்காணுவதில் உள்ள பிரச்சினை மற்றும் நிதியுதவி என்பனவே முக்கிய பிரச்சினையாக உள்ளன. எமது வேண்டுகோளை ஏற்று மீளக்குடியேறும் மக்களுக்கு வீடமைப்பினை ஏற்படுத்திக் கொடுக்க இந்திய அரசாங்கம் ஆயிரம் கோடி இந்திய ரூபாய்களை வழங்க முன்வந்தமை மிக முக்கியமான விடயமாகும். அதனைவிட காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வடபகுதி புகையிரத நிர்மாணம் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சரவர்கள் இந்திய அரச தலைவர்களை மட்டுமல்லாமல் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் மற்றும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடனும் பரஸ்பர சந்திப்புக்களை மேற்கொண்டோம். அச்சந்திப்புக்களும் நல்ல முறையில் இடம்பெற்றன. எனத்தெரிவித்தார். தனக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற முறையீடு தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் அவை உள்நோக்கம் கொண்டவை. ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றவாளியாக காணப்பட்ட நளினிக்கு ஆதரவாக செயற்படும் புகழேந்தி என்பவரே இதன் சூத்திரதாரியாவார். இந்திய அரசாங்கத்தினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்ட பிரபாகரனின் படத்தினை தாங்கிப் பிடித்தப்படி எனக்கெதிராக ஒரு சிலர் அவதூறு நடவடிக்கையினை மேற்கொண்டதுதான் வேடிக்கையான விடயமாகும். 90ம் ஆண்டு மே மாதம் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த பின்னர் பல்வேறு காரணங்களின் நிமித்தம் பல தடவைகள் இந்தியாவிற்கு சென்று வந்துள்ளேன். அப்போதெல்லாம் எதுவித குற்றமும் தெரிவிக்காதோர் நான் ஜனாதிபதி மஹிந்தவுடன் இணைந்து சென்றபோது அவதூறான குற்றச்சாட்டினை மேற்கொள்வது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். என்மீது தற்சமயம் எவ்வித குற்றச்சாட்டும் இல்லை. அவ்வாறு வந்தாலும் அதனை சந்திப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் எனத்தெரிவித்தார்.
வடபகுதியில் தற்சமயம் முக்கியமாக காணப்படும் வேலையில்லாப் பிரச்சினையினை தீர்க்க நான்கு ஆடைத்தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேர் நேரடி வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் அங்கு தெரிவித்தார். இந்திய ஊடகவியலாளர்களுடனான மேற்படி சந்திப்பில் இலங்கையில் பணிபுரியும் பிரபல இந்திய ஊடகவியலாளர்கள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’