போபாலில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்து வீட்டு அமெரிக்கத் தீவு ஒன்றில் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கும் வாரன் ஆன்டர்சனை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவோம் என 12 வயது இந்திய அமெரிக்க சிறுவன் அமெரிக்க தெருக்களில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறான்.
அந்த சிறுவனின் பெயர் ஆகாஷ் விஸ்வநாத் மேத்தா. 12 வயதேயாகும் இந்த சிறுவன் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரில் வசித்து வருகிறான். தற்போது போபால் விவகாரம் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அமெரிக்காவிலும் இந்த பிரச்சினையை பெரிதாக்கியுள்ளான் ஆகாஷ்.
நியூயார்க்கின் பார்க் அவென்யூவில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சட்ட அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஆகாஷும் கலந்து கொண்டான். அவனுடன் ஆகாஷின் அண்ணன் கெளதம் (15)உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆன்டர்சனிடம் வக்கீலிடம் புகார் கொடுக்க முயன்றனர். ஆனால் அவர் இல்லை என்று பதில் வந்ததால் மனு கொடுக்க முடியாமல் திரும்பினர்.
சிறுவன் ஆகாஷ் இந்தப் போராட்டத்தில் இறங்கியிருப்பது குறித்து கூறுகையில்,
இந்திய கோர்ட்டில் ஆன்டர்சனை நிறுத்த வேண்டும். அவர் செய்திருப்பது சாதாரண செயல் அல்ல. அமெரிக்க சட்டப்படி பார்த்தால் அது மிகப் பெரிய மனிதப் படுகொலை. அவரை இந்திய கோர்ட்டில் நிறுத்தப் போராடுகிறோம், தொடர்ந்து போராடுவோம் என்றான்.
ஆகாஷ், கடந்த 1992ம் ஆண்டு இந்திய கோர்ட் பிறப்பித்த சம்மன் நகல், குற்றப்பத்திரிக்கையின் நகல் உள்ளிட்டவை அடங்கிய பையையும் தன்னுடன் கொண்டு வந்திருந்தான். இதை ஆன்டர்சனின் வக்கீல்களிடம் கொடுக்கலாம் என வந்திருந்தேன்.
ஆனால் எங்களை உள்ளே கூட அனுமதிக்க மறுத்து விட்டனர். சம்மனை தபால் மூலம் அனுப்புங்கள் என்று கட்டட உரிமையாளர் கூறி விட்டார் என்றான்.
கட்டட உரிமையாளர்கள் அங்கிருந்து போகுமாறு கூறியதும்,
தனது பையில் இருந்த சம்மனை எடுத்த ஆகாஷ், அத்தனை பேர் முன்னிலையிலும் அதை சத்தம் போட்டு படிக்க ஆரம்பித்தான். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரும், கட்டட உரிமையாளர்களின் பிரதிநிதிகளும் ஆகாஷைத் தடுக்க முடியாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். அதேசமயம், அஙகு போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. முதலில் ஒரு போலீஸ்காரர் மட்டுமே இருந்தார். பின்னர் இது 6 பேராக அதிகரிக்கப்பட்டது.
ஆன்டர்சன் குறித்து ஆகாஷ் ஆவேசமாகப் பேசினான். நின்றிருந்த போலீஸாரிடமும், கட்டட உரிமையாளர்களிடமும் அவன் கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஆன்டர்சன் பின்னர் தப்பி விட்டார். கோர்ட்டுக்கு வராமலேயே அவர் தப்பி விட்டார்.
நான் ஆன்டர்சனின் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ள விரும்புவதெல்லாம், அவர் குற்றம் செய்தவர். தீயவர். அவருக்கு ஆதரவாக நிற்காமல் என் பின்னால் அணி திரண்டு வா என்பதுதான்.
உண்மையிலேயே போபால் சம்பவம் அவரது மனதை வருத்தியிருந்தால், அதற்காக அவர் வருந்துவாரேயானால், இந்திய கோர்ட் முன்பு அவரே ஆஜராகி தண்டனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் யூனியன்கார்பைடு நிறுவனத்திற்கும், டோ நிறுவனத்திற்கும் நல்லது.
அமெரிக்கச் சட்டப்படி யார் ஒருவர் தவறு செய்கிறாரோ, அவர்தான் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். இப்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தின் உரிமையாளராக டோ நிறுவனம்தான் உள்ளது. எனவே அந்த நிறுவனம்தான் தற்போதைய சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்றான் ஆகாஷ்.
இதேபோல வாஷிங்டனில் இன்னொரு பிரிவினர் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை அவர்கள் வன்மையாக கண்டித்தனர்.
வாரன் ஆன்டர்சனுக்கு எதிராக 12 வயது சிறுவன் நடத்திய போராட்டம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’