வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 ஜூன், 2010

சுகதார துறை சார்ந்த ஒத்திவைப்பு பிரேரணையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை!


இப்பொழுது வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு இயல்புநிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. போர் முடிந்த பின்னர் இந்த ஓராண்டுக்குள் ஏற்பட்டிருக்கின்ற  மாற்றங்கள் மக்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கின்றன. இந்த மாற்றங்கள் மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன.

இப்பொழுதுதான் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். இதுவரையிலும் அவர்கள் தங்களுடைய பாதுகாப்பைப் பற்றியும் நாளாந்த வாழ்க்கையைப் பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். நாளாந்த வாழ்க்கையைப் பற்றிய கவலையும் தங்களுடைய பாதுகாப்பைப் பற்றிய சிந்தனையுமே அவர்களை அதிகம் கவலைக்குள்ளாக்கியிருந்தது.

ஆனால் போர் முடிந்தவுடன் மக்களைச் சுற்றியிருந்த அபாயம் நீங்கி விட்டது. பாதுகாப்பின்மை என்ற கவலை அகன்று விட்டது. ஆனாலும் இன்னும் போர்ப் பீதியைப் பற்றிய வதந்திகளை சில தீய சக்திகள் பரப்பி வருகின்றன. மக்களை அச்சத்தில் வைத்திருப்பதற்கு இந்தத் தீய சக்திகள் புதிய கதைகளைப் புனைந்து கொண்டிருக்கின்றன.

மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை மக்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பதை இந்தச் சக்திகள் விரும்புவதில்லை. இவர்களுக்குத் தேவை மக்களுடைய அவலங்களே. மக்கள் அவலப்பட்டால்தான் அதை வைத்துக் கொண்டு அரசியல் நடத்த முடியும். அதை வைத்துக் கொண்டு தங்களுடைய வியாபாரத்தைச் செய்ய முடியும். அவலத்தை வைத்து வியாபாரம் செய்வது உலகத்திலேயே மன்னிக்க முடியாத குற்றமாகும். அக் கேவலமான மனிதாபிமானமற்ற, கொடுமையான செயல் வேறு கிடையாது.

அதற்காக அவலங்களை மூடி மறைக்க வேண்டும் என்று இங்கே அர்த்தப்படுத்திவிடக்கூடாது. அல்லது மக்களுடைய பிரச்சினைகளையும் அவலங்களையும் சொல்லக்கூடாது என்றும் யாரும் கருதிவிடவேண்டாம.

உள்ளதை உள்ளபடி சொன்னால் பிரச்சினை இல்லை. அதாவது உண்மையைச் சொன்னால் பிரச்சினை இல்லை. ஏனென்றால் உண்மையான விவகாரங்களுக்கும் உண்மையான விடயங்களுக்கும்தான் தீர்வு காணலாம். உண்மையல்லாத கற்பனையான விசயங்களுக்கு ஒரு போதும் தீர்வைக் காண முடியாது. அதனால்தான் சொல்கிறோம் எப்போதும் உள்ளதைச் சொல்லுங்கள். உண்மையைச் சொல்லுங்கள் என்று.

இப்போழுது யாழ்மாவட்டத்தில் உள்ள நிலைமை எவ்வளவோ முன்னேறி விட்டது. மக்களின் மகிழ்ச்சியான நிலைமையின் வளர்ச்சியைப் பற்றி இந்தச் சபையில் யாராவது பேசியிருக்கிறார்களா?
நாம் மக்களைப் பற்றிக் கதைக்கும்போது இரண்டு பக்கங்களையும் கதைக்க வேணும். அவர்களுடைய தேவைகளைப் பற்றியும் அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றியும் கதைக்கின்ற அதேவேளை அவர்களுக்குச் செய்யப்பட்டிருக்கும் நன்மைகளைப் பற்றியும் அவர்களுக்கான உதவிகளைப் பற்றியும் கதைக்க வேண்டும்.

மக்களை எதுவும் தெரியாதவர்களாக நாம் வைத்திருக்க முயலக்கூடாது. அவர்களை எல்லாமே தெரிந்தவர்களாக சுயமாகச் சிந்திக்கக்கூடியவர்களாக வைத்திருக்க வேணும்.

யாரும் அவர்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கக்கூடாது. நாங்கள் இப்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் சுகாதார நிலைமைகளைப் பற்றிப் பேசப்போகிறோம். அந்தச் சுகாதாரத் தேவையில் முக்கியமானது மக்களுடைய மனஆரோக்கியமாகும். ஆந்த ஆரோக்கியத்திலிருந்தே நாம் ஏனைய பௌதீக வளங்களைப் பற்றிச் சிந்திக்கலாம். இந்தப் பௌதீக வளங்கள் கூட வளமான, ஆரோக்கியமான சமூகமொன்றின் உருவாக்கத்துக்காகவும் அந்தச் சமூகத்தின் பேணுகைக்காகவுமே தேவைப்படுகின்றன.

ஆகவே இதைப் புரிந்து கொண்டு நாம் மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் சுகாதார நிலைமைகளைப் பார்ப்போம். யாழ்ப்பாண மாவட்டத்தில் இப்போது மருத்துவர்கள் பற்றாக்குறை முதல், ஏராளம் தேவைகள் இருக்கின்றன.

போர் முடிந்து ஓர் ஆண்டு கடந்து விட்டது யாழ்ப்பாணம் புதியதொரு முறையிலான வாழ்வு நிலையை பெற்றுள்ளது எனினும் அத்தியாவசிய தேவையான கல்வி மருத்துவம் போக்குவரத்து மின்சாரம் தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றில் இன்னும் இயல்பு நிலை தோற்றுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் பற்றாக்குறையாகவும் தொடர்கின்ற சூழ்நிலையில் மாற்றத்திற்கான முயற்சியில் நாம் தொடர்ந்தும் ஈடுபடவேண்டிய புற சூழ்நிலையே யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றன. மக்களின் தேவைகளையும் அவர்களி;ன் பற்றாக்குறைகளைகளையும் உணர்ந்துகொள்ள முடியாத உணர்ந்து கொள்ள விரும்பாத அரசியல் போக்கினை நாம் கைக்கொள்ள முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நாம் அனுபவிக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் எம்மைத் தெரிவு செய்த மக்களும் அனுபவிக்கக் கூடியதானதொரு சுபீட்சமிக்க வாழ்வை அவர்களுக்கும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய ஓர் அரசியல் வழிமுறையே நாம் முன்னெடுக்கின்றோம்.

இந்த அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் சுகாதாரப் பிரச்சினைகளை இந்த சபையில் முன்வைப்பதன் ஊடாக எமது மக்களுக்கான சுகாதார சேவைகளின் ஓர் ஆரோக்கியமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் புற்றுநோய்க்கான சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்ட போது எமது மக்களிடத்தே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அர்ப்பணிப்பு மிக்க வைத்தியர்கள் சுகாதார பணியாளர்களின் சேவை சிறப்புற நடைபெறும் இப் பிரிவு தற்பொழுது பல்வேறு வகைகளில் பற்றாக்குறைகளைச் சந்திக்கின்றது.

முதலாவதாக யாழ் போதனா வைத்தியாசாலை புற்றுநோய்ப் பிரிவில் புற்றுநோய் அறிகருவி 50 வருடங்களுக்கு முறபட்டதாக ஓர் பழைய இயந்திரமாக இருப்பது வருந்தத்தக்க ஓர் விடயமாகும். இந்த இயந்திரம் நவீனமான ஓர் இயந்திரத்தினால் பதிலீடுசெய்யப்பட வேண்டும் என்பதை வைத்திய நிபுணர்கள் பல வருட காலமாக வலியுத்தி வருகின்றார்கள்.

மார்ப்பு புற்றுநோய் அறிவதற்கான கருவியும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இதுவரையில் வழங்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கதொரு விடயமாகும். எனவே யாழ்ப்பாண மண்டைதீவு பகுதயில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலத்தில் புதிதாக நவீன புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தல் அவசரமானதும் அவசியமானதுமாகவுள்ளது என்பதை இச்சபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

15 வைத்தியசாலைகளை கொண்ட யாழ் மாவட்டத்தில் வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், துணை வைத்திய சேவையாளர்கள் ஆகியோர் பற்றாக்குறை இம்மாவட்டத்தில் நிலவி வருகிறது. பின்தங்கிய வைத்திசாலைகள் பிரதேச வைத்தியசாலைகள் குறிப்பாக தீவகப் பகுதி வடமராட்சி கிழக்குப் பகுதி மற்றும் தென்மராட்சி பகுதி போன்ற பகுதிகளில் வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

இந்த நிலைமைகளை சீர்செய்வதற்குரிய ஆளணிகளை வழங்க வேண்டிய கடைப்பாடு சுகாதார அமைச்சுக்கு உண்டு என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதே போன்று மக்களும் நிண்ட தூரம் பயணம் செய்து வைத்திய சேவையை பெற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலையும் தோன்றுகிறது. அஸ்மா நோய்க்கான கிளினிக் ஒரு மாதக காலத்திற்கு மேலாக நடைபெறவில்லை என்று எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போது யாழ்ப்பாண சுகாதார சேவைகளின் நெருக்கடிகளை எங்களால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

நோய் சிகிச்சை நிலைமைகளை போன்றே நோய் வருமுன் காக்கும் சுகாதார சேவைகளின் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. பிரதானமானது சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் குடும்பநல உத்தியோகத்தர் போன்ற மருத்து சேவையாளர்களின் பற்றாக்குறை மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது. இவற்றுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சரின் மேலான கவனத்திற் கொள்ள விரும்பிகின்றோம்.

டெங்கு நோய் இன்று நாடுதழுவி பிரச்சினையாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ளது என்பதை டெங்கு நோய் தொடர்பான புள்ளி விபர தரவுகள் சுட்டி நிற்கின்றன. டெங்கு உட்பட பல்வேறு விதமான தொற்று நோய் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய காரணிகளான வடிகாலமைப்புச் சீரின்மையும் முறையான கழிவகற்றும் முகாமைத்துவமின்மையும் உள்ளது.

குறிப்பாக இன்று அதிகமான தென்னிலங்கை மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வரும் யாழ் நகரம் இந்த பிரச்சினைகளால் திணறுகின்ற நிலையை அவதானிக்க முடிகிறது. எனவே யாழ் மாநகர சபையுடனும் ஏனைய நகர சபை மற்றும் பிரதேச சபைகளிடனுமான வடிகால் மற்றம் கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு அதிகளவான நிதிஒதுக்கீடு இங்கு அவசியமாகிறது. சுகாதார சேவையுடன் தொடர்புடைய வடிகாலமைப்பு கழிவகற்றல் முகாமைத்துவ செயற்பாடுகளுக்கான நிதிகளை ஒதுக்குவதுடன் அதன் செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளையும் கவனத்திற் கொள்ளுமாறு சுகாதார அமைச்சரை இவ்விடத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

போரின் நெருக்கடியினையும் சுமந்து இன்று மீள்குடியமர்ந்த கிளிநொச்சி மாவட்ட மக்களின் சுகாதா சேவைகளின் பற்றாக்குறைகளையும் பாரியளவில் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதை எங்களுடைய கவனத்தில் கொண்டு வரப்பட்டது. இம் மாவட்டத்திற்குரிய வைத்திய நிபுணர்கள் பொது வைத்திய நிபுணர்கள் துணை வைத்திய சேவையாளர்களின் பற்றாக்குறை போன்ற துயரமான நிலைமைகள் களையப்பட வேண்டிய அவசியமாகின்றது.

பரந்த நிலப்பரப்பில் இம்மாவட்ட மக்கள் சுகாதார சேவைகளை பெறுவதற்கு அதிக தொலை தூரத்திற்கு பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகின்றது. இங்கே மீள்குடியேற்றத்திற்கு பின்னர் பாம்புக் கடியினால் இறந்தவர்களின் தொகை அதிகமாகவுள்ளது. சிகிச்சையில் ஏற்பட்ட தாமதங்கள் முக்கிய காரணமாக அமைந்திருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் இம்மாவட்டத்தில் உள்ள வளங்களைப் பெருக்கி நோயாளர்களைக் கொண்டு செல்லும் காவுவண்டிகள் இன்னும் அதிகமாக வழங்கப்பட வேண்டியதே முக்கியமாகும்.

வைத்தியசாலைகள் பலவற்றில் வைத்திய சேவையாளர்கள் தினமும் அம்புலன்ஸில் சென்று சேவையாற்றி அன்றைய தினமே திரும்புகின்ற நிலைமையை மாற்றத்தக்க வகையில் அவர்கள் வைத்தியசாலையிலேயே தங்கி சேவை செய்வதற்கு விடுதி வசதிகளையும் இங்கே அதிரிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. அத்தோடு நெடுந்தூரம் பயணம் செய்து வைத்திய சேவையை பெற பொதுமக்கள் பல்வேறு வகையில் கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.

பிரசவ தாய்மார்களை பிரசவத்திற்கு நெடுந்தூரம் கூட்டிச் செல்கின்ற கஸ்டத்தை நீக்குவதற்காக நோயாளர் நலன்புரி சேவை ஒன்றினை மீள்குடியேறிய மக்களின் பகுதிகளில் ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றை மேற்படி பகுதி மக்கள் முன்வைத்துள்ளார்கள். நெருக்கடிகளுக்குள்ளும் அவலங்களுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு மக்களால் தெரிவு செய்யப்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். எனவே குறுகிய சுயநலமிக்க ஒவ்வொருவராலும் மக்களுக்கு விரோமான செயலைத் தவிர்த்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு களமாக பாராளுமன்றத்தை பயன்படுத்தி ஜனநாயக மரபு ஒன்றை உருவாக்குவோம்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’