பனைசார் உற்பத்திகளைப் பெருக்கும் போது அது சார்ந்து வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மென்மேலும் மேம்படுத்த முடியுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் வீரக்குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச்சபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எமது அமைச்சின் கீழ் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் மக்களுக்குச் சேவை செய்வதே எமது நோக்கமாகும்.
கடந்தகால யுத்தம் காரணமாக குறிப்பிட்ட உற்பத்திகளை வடக்கு கிழக்குப் பகுதிகளில் உற்பத்தி செய்யமுடியாத நிலையும் சந்தைப்படுத்த முடியாத நிலையும் காணப்பட்டது. தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இந்த அமைச்சுக்கு உட்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதுடன் யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பனை அபிவிருத்திச் சபையூடாக மென்மேலும் வளர்ச்சி காண வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
பனைசார் தொழில்த்துறை விருத்தியடையும் போது வடக்கு கிழக்கு மட்டுமல்லாமல் நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கக் கூடியதாகவும் எமது அமைச்சுக்குக் கீழான சுயதொழில் முறைகளை விருத்தியடையச் செய்ய நல்லதொரு தருணம் கிடைத்துள்ளது.
அத்துடன் பனை அபிவிருத்திச்சபை ஊடாக உற்பத்திகளைப் பெருக்கிக் கொள்ளும் போது அவற்றைச் சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் உறுதி வழங்கினார்.
சபை மண்டபத்தில் அதன் தலைவர் பசுபதி சீவரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பனை அபிவிருத்திச்சபை ஊடாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் அடங்கிய ஆய்வு அறிக்கையினை ஆராய்ச்சித் துறை உதவி முகாமையாளர் விஜேந்திரன் சமர்ப்பித்தார்.
தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறப்புரையாற்றும் போது பிரதி அமைச்சர் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் இவ்விதமான நல்ல தருணத்தைப் பயன்படுத்தி பனைசார் தொழில்த்துறையை மென்மேலும் விருத்தியடைய ஒருமித்து உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் துறைசார் உயர் அதிகாரிகள் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’